மலேஷிய மாணவர்கள் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டார்களா?(படங்கள் )

409

மலேஷியாவின் சுங்கை பூலோவுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளி ஒன்றில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு மாதத்தின்போது குளியலறையை ஒட்டிய பகுதியில் சாப்பிடும்படி நிர்பந்திக்கப்பட்டதைக் காட்டுவதாக கூறப்படும் படங்கள் சில இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த புகைப்படங்களை தமது முகநூலில் வெளியிட்டவர் அந்த பள்ளியில் படிக்கும் பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் படங்களில் அந்தப் பள்ளிக்கூடத்தின் குளியலறையை ஒட்டிய உடை மாற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மேசைகளைச் சுற்றிலும் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.

இவற்றில் கணிசமானவர்கள் மலேஷிய இந்திய வம்சாவளியினரைப் போல தோன்றுகின்றனர். இது ரமதான் மாதம் என்பதால் பள்ளியின் சிற்றுண்டிச் சாலை மூடப்பட்டிருப்பதை காட்டும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளியின் சிற்றுண்டிச்சாலை ரமதான் மாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்றும் கருதப்படுகிறது.

பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டிருப்பதால் பள்ளியின் கழிப்பறை/குளியலறைகளுக்கு அடுத்து உள்ள உடைமாற்றும் இடத்தில் மேஜைகள் போடப்பட்டு அங்கே பள்ளி மாணவர்களை சாப்பிடுமாறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டதாக கூறப்படுவது சரியான தகவலல்ல என்கிறார் மலேஷிய அரசின் கல்வித் துணை அமைச்சர் பி.கமலநாதன். அவருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த பள்ளிக்கூடத்தின் கேண்டீனில் மராமத்து பணிகள் நடப்பதால் அது கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டுவிட்டதாகவும், ரமலான் நோன்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பதே தமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல் என்றும் தெரிவித்தார் கமலநாதன்.

அனாலும் தற்காலிகமாக குளியலறையை ஒட்டிய இடத்தில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளை சாப்பிடவைத்தது தவறு என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக தாம் நேரடியாக அந்த பள்ளிக்கு நாளை செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

-BBC தமிழ்-

4 3 1