இறந்த கணவனின் சடலம் அருகே நின்று புகைப்படம் எடுத்து வித்தியாசமான விழிப்புணர்வு நடவடிக்கை!!

267

Selfi

போதைப்பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலின் அருகே தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

போதைப்பழக்கம் உயிரை பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படத்தை இங்கு பதிவு செய்துள்ளேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள சின்சினாட்டி நகரைச் சேர்ந்த பெண் ஈவா ஹாலண்ட். இவரது கணவரின் பெயர் மைக் செட்டில்ஸ். கணவர் ஹெராயின் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த தம்பதிக்கு லூகாஸ் மற்றும் அவா என்ற மகளும், மகனும் உள்ளனர். மைக்கும், ஈவாவும் 11 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர்.

அமைதியான இவர்களது வாழ்க்கையில் கடந்த இரண்டாம் திகதி சூறாவளி தாக்கியது. ஹெராயின் போதைக்கு அடிமையாகிப்போன மைக் திடீரென்று மரணமடைந்தார்.

இதனால் மனமுடைந்து போன ஈவா, அந்த சோகத்துக்கு இடையிலும் ஒரு காரியத்தை செய்தார். சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தனது கணவரின் உடலுக்கு அருகே தனது பிள்ளைகளுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர், இந்தப் புகைப்படத்தை தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வெளியிட்டார். கூடவே தனது சோக வாழ்க்கையையும், மைக்குக்கு நேர்ந்த கதியையும் விளக்கி, இதுதான் எல்லோருக்கும் கதி. கடைசியில் மரணம்தான் கிடைக்கும். இன்றே போதைப் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று அதில் வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

அவரது இந்தக் கடிதமும், புகைப்படமும் இணையத்தின் வழியாக வைரலாக பரவி, பலரையும் உலுக்கியது. தங்களது கெட்ட பழக்கத்தை விட ஆரம்பித்து விட்டதாக சிலர் பேஸ்புக் மூலம் ஈவாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 12-ம் திகதி தனது பேஸ்புக் பக்கத்தில் மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவத்தையும் ஈவா ஹாலண்ட் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை நான் வீட்டின் அருகாமையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தேன், என்னைப் பார்த்ததும் ஒரு பெண் அருகாமையில் வந்தார். உங்களை கட்டிப்பிடிக்க அனுமதிப்பீர்களா? என்று கேட்டார். நாம் கணவனை இழந்து துயரப்படுவதுபோல், இந்தப் பெண்ணுக்கும் என்ன கஷ்டமோ? என்று யோசித்த நானும் சம்மதித்தேன்.

என்னை இறுக கட்டியணைத்தபடி சில நிமிடங்கள்வரை கதறியழுத அந்தப் பெண், ‘நான் ஹெராயின் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிப் போனவள். அதில் இருந்து விடுபட வழி அறியாமல், நேற்றிரவு அதிகமாக ஹெராயின் பயன்படுத்தி என் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தேன்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக உங்கள் ‘பேஸ்புக்’ பக்கத்தை பார்த்ததால் எனது தவறான முடிவில் இருந்து விடுபட்ட நான், போதைப்பழக்கத்தையும் அடியோடு மறந்துவிட தீர்மானித்து விட்டேன்’ என்று அழுதபடி கூறினார்.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி, நீண்ட நேரம் அழுதவாறு அங்கேயே நின்று விட்டோம். இந்த சம்பவம் எனது பேஸ்புக் பதிவுக்கு கிடைத்த வெற்றியின் முதல்படி என்றே நான் கருதுகிறேன் என ஈவா ஹாலண்ட் பெருமிதம் தெரிவித்துள்ளார்.