எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு ஊரைச் சுற்றி வந்த மகனை கொன்று விட்டார் தந்தை. வேலூரில் இந்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.
சத்துவாச்சாரி பகுதியில் மரக்கடை வைத்திருப்பவர் குருலிங்கம். இவர் தனது மரக்கடையில் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியாகி இறந்து கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் குருலிங்கத்தின் தந்தை நடராஜன் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் அவர்தான் குருலிங்கத்தைக் கொன்றது தெரிய வந்தது. அவரும், இன்னொரு மகன் குமரேசனும் சேர்ந்து குருலிங்கத்தை கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர்.
குருலிங்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். எந்த வேலையையும் உருப்படியாக செய்யாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். பலமுறை நடராஜன் அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்பு இரவு குருலிங்கத்திற்கும், நடராஜனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
அப்போது அங்கு குமரசேனும் இருந்துள்ளார். சண்டை முற்றியதில், குமரேசனும், நடராஜனும் சேர்ந்து கட்டையை எடுத்து சரமாரியாக குருலிங்கத்தை அடித்தனர். இதில் அவர் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிய வந்தது.