வவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நூல்கள் வெளியீட்டு விழா : ஒரு பார்வை!!

220


Maithili

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் 04.10.2015 அன்று திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.


01.தவறுகள் தொடர்கின்றன – கைக்கூ வடிவம்
02.சீதைக்கோர் இராமன் – கவிதை
03.அனாதை எனப்படுவோன் – நாவல்
04.வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம் – கட்டுரை

திருமதி மைதிலி தயாபரன் அவர்கள் பிரபல சட்டத்தரணி தயாபரனின் மனைவியும், வவுனியா மாவட்டத்திலிருந்து பேராதெனியா பல்கலைக்கழகத்திற்கு முதலாவதாக தெரிவுசெய்யப்பட்ட மின்னியல் பொறியியல் பட்டதாரியுமாவார்.தற்பொழுது வவுனியா மின்சார சபையின் சிரேஸ்ட பொறியியலாளராகப் பணிபுரிகிறார். இவர் ஏற்கனவே. சொந்தங்களை வாழ்த்தி, வாழும் காலம் யாவிலும் ஆகிய நாவல்களையும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் எனும் கவிதை நூலினையும் வெளியிட்டிருந்தார்.

தற்பொழுது வெளியிட்ட மேற்படி விழாவிற்கான தலைமையினை பிரதம பொறியியலாளர் செர்வராசா பிரபாகரன் அவர்கள் ஏற்றிருந்தார். பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு பிரதேச செயலர் காளிராஜா உதயராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சிதம்பரநாதன் அவர்களும், கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு கல்விவலய தமிழ் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் உதயகுமார் அவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


நிகழ்வுகளாக.. அறிவிப்பாளர் நாகராஜா நிகழ்வினைத் தொகுத்து வழங்க.. மங்கல விழக்கேற்றலைத் தொடர்ந்து வரவேற்புரையினை சட்டத்தரணியும் நூலாசிரியரின் கணவருமாகிய தயாபரன் அவர்கள் வழங்கினார். பின்னர் தலைமையுரையைத் தொடர்ந்து வெளியீட்டுரையினை கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள் வழங்க அறிமுகவுரையினை வன்னியுர் செந்தூரன் வழங்கினார்.

தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்ச்சங்கத் தலைவர் நாதன் ஐயா அவர்கள், பிரபல சட்டத்தரணி சிற்றம்பலம் அவர்கள், தமிழ் விருட்சம் நிறுவுனர் கண்ணன் அவர்கள், வரலாற்றாய்வாளர் அருணா செல்லத்துரை அவர்கள், ஓய்வுநிலை உதவி அரச அதிபர் ஐயம்பிள்ளை அவர்கள், பண்டிதர் பிரதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


நூல்களின் விமர்சன உரைகளாக.. வீடுகளில் மின்சக்தி விரையமாதலைக் குறைப்போம் நூலினை பிரதம பொறியியலாளர் பிரபாகரன் வழங்க, அனாதை எனப்படுவோன் நாவலினை எழுத்தாளர் மேழிக்குமரன் அவர்கள் வழங்க, சீதைக்கோர் இராமன் நூலினை வவுனியா சீ.சீ.ரி.எம்.எஸ் தமிழாசிரியர் கதிர்காமசேகரன் வழங்க தவறுகள் தொடர்கின்றன நூலினை வவுனியா பாவற்குளம் தமிழாசிரியர் வரதராஜன் வழங்கினார்.

சிறப்புரையினை கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வழங்கினார். மேற்படி உரைகளுக்கிடையில் சிறப்புக் கவியுரையை குரும்பையயூர் ஐங்கரன் அவர்கள் வழங்கியிருந்தார். இடையிடையே விருந்தினர்கள் உரையும் நடைபெற்றது. இறுதியாக ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையாக நூலாசிரியரின் உரை அமைந்திருந்தது.

பட்டதில் நான் தொட்டவை:

ஒரு நூல்வெளியீட்டின் மூலம் படைப்பாளி பின்வரும் விடையங்களையே எதிர்பார்க்கிறார் என்பது எனது கருத்து.

01.வெளியீட்டினால் படைப்பாளிக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தி,

02.தனக்கானதும் தனது படைப்புக்கானதுமான ஓர் அங்கீகாரம்

03. பல் தளத்திலிருந்து வரும் தர்க்கமான விமர்சனங்கள்.

மேற்படியான இவை, இவ்விழாவின் மூலம் ஆசிரியருக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் தத்தமக்கு ஏற்றாப்போலான விருப்பு வெறுப்புக்களையும் விமர்சனங்களையும் கொண்டியங்கும் இலக்கியத்துறையின் பல போக்குடைய வித்தகர்கள் பலரும் ஒருங்கே வந்தமர்ந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தமையினை அடுத்த இளவல்களுக்கான நல்ல திறவுகோலாகக் கருதலாம்.

பல அரங்குகளில் நீண்ட உரைகளால் நித்திரை கொள்ளவைக்கும் பேச்சாளர்களைப் பார்த்திருக்கிறோம். மாறாக தமக்குரிய வற்றுடன் நின்று இங்கு நேரம் கவனிக்கப்பட்டிருந்தமையும் கண்டேன். மொழியியல், சமூகவியல் போன்றனவே அதிகம் உரையாடப்பட்டிருந்தது. அரசியலைக் காணவே இல்லை. இது நல்ல ஒரு தடம் எனவே எண்ணத் தோன்றுகிறது.

தலைமையுரையாகவும், ”வீடுகளில் மின் சக்தி விரயமாதலைக் குறைப்போம்” நூலுக்கான விமர்சன உரையாகவும் நிகழ்த்திய பொறியியலாளர் பிரபாகரன் அவர்கள்.. தனது பணிசார் பொறியியலாளரை வாழ்த்தியதுடன்.. முழுமையாக மின்சாரப் பாவனை தொடர்பாகவே தனது கருவினைக் கொண்டிருந்தார். அதனை அவருக்கேயுரிய பாணியில் ஓர் உரையாடல்ப் போக்கினைக் கெயாண்டு விபரித்திருந்தார்.

இந் நூலிலுள்ள பல சொற்களுக்கான சிறு சிறு விளக்கங்களையும் கொடுத்துச் சென்றார். அத்துடன் மின் கட்டணங்கள் உயர்வதற்கான காரணங்களையும், இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளையும் கூறியதுடன், எமது நாட்டின் அடிப்படைத் தேவையான மின் சக்தியினை சேமிக்கப்பழக வேண்டுமென்பதையும் கேட்டுக்கொண்டார். சந்தர்ப்பம் ஒன்றைசரியாகப் பயன்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்.

இதற்கான பின்னட்டைக் குறிப்பு இலங்கை மின்சார சபை (வடக்கு), மின் பொறியியலாளர் ( விநியோகப் பராமரிப்பு), திரு ஜேசுதாசன் அமலேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.

வெளியீட்டுரை:
வெளியீட்டுரையில் கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள்.. இன்று தனது முதல் வெளியீடாக கிருஸ்னிகா வெளியீட்டகம் மைதிலி தயாபரனின் நான்கு நூல்களை வெளியிட்டுவைக்கிறது என்றார். கொள்கைகளை இழந்த அனாதைகளை நினைவுபடுத்தியுமிருந்தார். தனித்து ஒரு நூலென நிற்காது நான்கு நூல்களின் ஆழமான உட்பொருளை சுருக்கமாக தந்துமிருந்தார்.

கைக்கூ கவிதை வடிவத்தில் சிந்தியல்த் தன்மை காணப்படுவதாகவும் அதன் தன்மைகள் ஆங்காங்கே தென்படுகிறது என்பதுடன்.. சீதைக்கொரு இராமன் நூவின் சமர்ப்பணத்தையும் எடுத்துக்காட்டியிருந்தார்..

”அகத்தினில் அக்கினிகொண்டு
உறங்கி நிற்கும் எரிமலையாய்
அவரவர் முகத்தையெல்லாம்
ஆனந்தமாய் காட்டி நிற்கும்
அழகுமுகம் கொண்ட பெண்கள்
அனைவருக்கும்
சமர்ப்பணம்”
இவ்வாறே அந்த சமர்ப்பணம் அமைந்திருந்தது. ஆக.. வெளியீட்டுரையே தொடர்ந்து புத்தகங்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டது எனலாம்.வெளியீட்டுரையைத் தொடர்ந்து நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிறப்புரை:
சிறப்பு விருந்தினர் உரையில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள்: பொதுவாகவே அகளங்கன் அவர்கள் ஒரு கருவிற்காக பல பொருள் தருவித்தே தனதுரையை வழங்குவார். இதில் ஒருவகை வித்துவச் செருக்குடன் கூடிய இலகு தமிழ் இருக்கும். எடுத்துக்காட்டுக்கள் தேவையானளவு தென்படும். அவ்வப்பொழுது வந்த விழும் நகைச்சுவைக்கும் குறைவிருக்காது.

அதனடிப்படையில் பொதுவான இலக்கியத் தன்மைகள் மற்றும் அண்மைக்காலப் போக்குகளின் தாக்கம் என்பவற்றை கோடிட்டுக்காட்டியிருந்தார்.

சாலமோனின் கதையினை கூறி அனாதைக்கு ஒரு விளக்கமும் தந்திருந்தார். சீதைக்கு ஓர் இராமன் என்பதை மிகவும் நேர்த்தியாக தலைப்பிட்டிருக்கிறார். உயிரெழுத்துச் சொல்லுக்கு முன்னால் ஓர் என்றேவரும். ஒரு என்று வராது. அதைவிட ஓர் என்பது சிறப்பானது, மேன்மையானது, உயர்வானது எனும் பொருள் படும். (சீதைக்கு உயர்வானவன் இராமன்) ஆகவே நல்ல தலைப்பென்றார். சாதாரண தரத்தில் மட்டுமே தமிழை ஒரு பாடமாகக் கற்ற இவ் மின்னியல் பொறியியலாளர் எம் தமிழ் கலைமானிகள் மற்றும் முதுகலைமானிகளுக்கொரு முன்மாதிரி எனப் பொருள் படவும் சிலதைக் கூறியிருந்ததுடன் தமிழ் எழுத தமிழ் பட்டதாரியாகத்தான் இருக்க வேண்டியதில்லை எனக் காட்டமாகவும் உரைத்திருந்தார்.

விமர்சன உரைகள்

”அனாதை எனப்படுவோன்” நாவலுக்கான விமர்சன உரையில், தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள்.. நாவலின் தோற்றம் தன்மை பற்றிக் கூறியதுடன் முற்றிலும் இவ் நவலுக்குள் நின்றதனையே அவதானித்தேன். பெற்றோரை இழந்தவன் மட்டமல்ல.. கொள்கைகளை இழந்தவனும் அனாதையே என்பதையும் வெளிப்படையாக அனாதை என்பதை பாவிக்கும் போது பல மனங்கள் உடைவதாகவும் கூறிய நூலாசிரியரின் கருத்தினை ஆமோதித்திருந்தார்.

கிராமப்புற இயற்கை அமைவுகள் அதிகமுள்ளதாகவும், அனாதைகளுக்காக ஆசிரியர் கடவுளிடம் நோவதாகவும் இனங்கண்டார். மேலும், கிராமப்புற பொது மண்டபத்தில் மாடு கட்டப்படல், நூல்நிலையங்களில் சீட்டாடப்படல் என்பவற்றுடன் சிறுவர் துஸ்பிரயோகங்களினூடாக ஆசிரியர் ஓர்பாதுகாப்புணர்வுகளை எடுத்துக்காட்டியிருப்பதும், மரபணுப்பரிசோதனை தொடர்பாக விபரித்திருப்பதும் இந்நூலினை மேலும் கனதியாக்கியிருப்பதாகக் கூறினார்.

மேலும் இந் நாவலுக்கு அப்பாற்பட்ட கருத்தொன்றையும் வெளிப்படுத்தினார். நாவல்களில் தன்சார் கருத்துக்களை அதிகமுள்ளடக்குவதைத் தவிர்த்து பாத்திரங்களினூடாக உணர்வுகள் வெளிப்படக் கூடியவாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டுமென்றார்..இதற்கான பின்னட்டைக் குறிப்பு வெளியீட்டகத்தினரால் வழங்கப்பட்டிருக்கிறது.

”சீதைக்கொரு இராமன்” கவிதை நூலுக்கான விமர்சன உரையில் தமிழாசிரியர் ஐ.கதிர்காமசேகரன் அவர்கள்.. கம்பன் தளத்தில் நின்று பா முழக்கமிட்டார். இவரது ஏற்ற இறக்கமுடைய சந்தத்தொனி பல இடங்களில் என்னைக் கட்டிப் போட்டதுண்டு. சில இடங்களில் விளங்காமல் விட்டதுமுண்டு. இந்நூலில் சீதையை இராமன் தீக்குளிக்க செய்தமையை நூலாசிரியர் விமர்சனத்திற்குட்படுத்துகின்ற இடத்தில், கதிர்காம சேகரன் அவர்களால் அது வலிந்து நியாயப்படுத்தப்பட்டதோ எனவும் எண்ணத்தோன்றியது.

ஆனால் ஆட்சியதிகாரத்திலிருப்பதனாலும்.. மக்களால் போற்றப்படுகின்றதனாலும்.. அவ்விடத்தில் ராமனுக்கு அந்தக் கடமை (அதாவது தெளிவுபடுத்தல்) இருந்தது எனப் பொருள் கொள்ளலாம் கதிர் ஆசிரியரின் உரையினை..இதற்கான பின்னட்டைக் குறிப்பு நாடகப்படைப்பாளி கஜரதி பாண்டித்துரை அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.

”தவறுகள் தொடர்கின்றன” எனும் கைக்கூ வடிவிலான கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்தினை தமிழாசிரியர் வரதராஜன் அவர்கள் வழங்கும் போது.. ஓரே தலைப்பில் மூன்று வரிகளினூடாக ஒவ்வொரு கவிதைகளையும் ஆசிரியர் நகர்த்திச் செல்லும் பாங்கினைத் தொட்டுக்காட்டியிருந்தார். இது முழுமையான கைக்கூ அமைப்பு இல்லையைன்றும், ஆனால் கைக்கூ பண்புகளை அதிகம் தாங்கியுள்ளதென்றும் கருத்தரைத்தவர், இது ஒரு புதுப்புனைவு முறையென்றும், அதன் மூன்றடி வடிவத்தின் சிறப்பினையும் கோடிட்டுக் காட்டியதுடன். . பல நெருக்கங்களை இறுக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவகை இலக்கிய வடிவம் எனவும் கூறினார்.

ஆனால் இது தொடர்பாக இன்னும் வரதன் ஆசிரியர் கூறியிருக்கலாம். அதற்கு நேர முகாமைத்தவம் இடங்கொடுக்காதிருந்திருக்கலாம்.இதற்கான பின்னட்டைக் குறிப்பு என்னால்வழங்கப்பட்டிருக்கிறது. (முல்லைத்தீபன்)

சிறப்புக் கவியுரை: சந்தங் கொண்டு கவிநயத்து அதையொரு உரையாகவே வாசிக்கும் கனதியான தன்மை எப்பவும் குரும்பையூர் ஐங்கரன் அவர்களிடமுண்டு. நூலாசிரியருக்கான வாழ்த்துக்களை தாராளமாக அள்ளிவழங்கியவர் அவ்வப்பொழுது நூலாய்வுகளையும் கவிதையினால் நிகழ்த்தியது போலிருந்தது. அதைவிட ”கடி”யுரைகளினூடாக பல பேரின் சங்கதிகதிகளை சந்தத்தினால் சந்திப் பக்கம் கொண்டுவந்தது போலும் இருந்தது. அவரிடமிருந்து என்னில் பட்டதில் நான் தொட்டவை..
வாழ்த்துகிறார்..

”கைக்கூ வடிவக் கவிதைகளை
கைக்கு அடக்கமாய் நூலில்
மைதிலி அம்மணி தந்துள்ளார்
மனதை அம்மணம் செய்துள்ளார்”

”புரியாதவை தான்
புதுக்கவிதையென
புதுக்கதை ஒன்றும் சொல்லுகிறார்.
அதுதான் இப்போ அதிகம் பேர்
‘கவிஞர்’ என்று கலக்குகிறார்”

”சீதை சிந்தியாத சிலதையெல்லாம்
மைதிலி சிந்தித்தார் என்றால்..
சீதை சந்தியாத பலவற்றை
மைதிலி சந்தித்தார் என்பதால்த்தான்”

கம்பன் செய்தது இராமாயணம்
மைதிலி செய்தது சீதாயணம்

இவ்வாறு தர்க்கரீதியாக சுவாரசியமாக முடித்திருந்தார். அவரது சொல்லாடல்களை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

விருந்தினர் உரைகள்: பொதுவாக விருந்தினர் உரைகள் வாழ்த்துரைகளாகவோ, அன்றி சமூக ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் சமூக மேம்பாடு கருதியதாகவேதான் காணப்படும். இவ்விழாவிலும் அதற்கென்றொரு வதிவிலக்கல்ல. இருப்பினும் சில விடயங்கள் என்னைத் தொட்டிருக்கிறது.

கல்வியற் கல்லூரி பீடாதிபதி சிதம்பரநாதன் அவர்களின் உரை சுவாரசியமாக இருந்தது. சில தர்க்கப்பாடுகளை நகைச்சுவையாகத் தந்தார். இவரது உரைகளில் பெரும்பாலும் உணர்வுநிலை மேலோங்கியிருக்கும்.சில இடங்களில் மனங்களைக் கரைக்கும் ஆற்றலும் இவருக்குண்டு. மேலும் தெற்கு பிரதேச செயலர் தனதுரையில் பிரதேச நலன் சார் முக்கியத்தவத்தினையும் செயற்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தார்.

தொடர்ந்து தமிழ் பாட உதவி கல்விப்பணிப்பாளர் உதயகுமார் தனதுரையில்.. மைதிலி சற்று ஆண்களை சாடுவதாகவும், பெண்ணியம், பெண்ணிலை வாதம், பெண்ணிலை சமத்தவம் என்பவற்றை வெளிக்காட்ட முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார். இடையில் பாவம் ஆண்கள் எனக்கூறிவிட்டு ஒரு பெரு மூச்சொன்று விட்டது போலவும் எனக்குத் தென்பட்டது.

ஏற்புரை: நூலாசிரியர் தனது ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையை வழங்கியதைத் தொடர்ந்து விழா இனிதே நிறைவு பெற்றது.
உண்மையில் சம கால பொருளாதார நெருக்கடி, துரிதமாக அதிகரித்துவரும் வேலைப்பளு மற்றும் பல்கிப் பெருகும் சேவைகள், தேவைகள் என்பவற்றுக்குள் ஓரு புத்தகம் வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான விடையமே. அதிலும் கனதியான படைப்பக்களை கனக்க (அதிக) வெளியிடுவதும் சிரமமே.

உதுக்குள்ள (மண்டபத்துக்குள்ள) என்ன நடக்கென்றே பார்க்க வாறதுக்கே ஆக்கள் இல்ல. இது இப்படியிருக்க.. இலக்கிய மும்முனைகள் ஒன்றாக அருகருகே இருந்தமையும்.. மாறி மாறி உரை நிகழ்த்தி முடிந்தவுடன் கைலாகு கொடுத்து கருத்துப்பரிமாறிக் கொண்டதையும் அவதானித்தேன். அனால் யாருடைய ”உரைகளிலும்” குத்துக்களையும் சீண்டல்களையும் அவதானிக்க முடியவில்லை.

சரி.. சரி.. இலக்கிய அரசியல்ல இதல்லாம் சகயமப்பா….?

-வே.முல்லைத்தீபன்-