இந்திய உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அரசு மருத்துவரைக் கொலை செய்த பெண் அவரது ஆணுறுப்பை வெட்டி வைத்தியரின் மனைவிக்குப் பார்சல் அனுப்பிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் இந்தக் கொலையைச் செய்தது இந்தப் பெண் தான் என்று போலீஸாருக்குத் தெரியாமல் இருந்தது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர்தான் இக்கொலையில் ஒரு பெண்ணுக்குச் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. கொடூர கொலையை செய்துவிட்டு தலைமறைவான அந்தப் பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கான்பூரைச் சேர்ந்தவர் வைத்தியர் சதீஷ் சந்திரா. 42 வயதான இவர் கான்பூர் தெஹத் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ரெனியா என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார்.
கொலையான சதீஷ் சந்திராவின் ஆணுறுப்பு தனியாக துண்டித்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடூரக் கொலையால் கான்பூர் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியும் அவர்கள் வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான் இக்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலையைச் செய்தது ஒரு பெண் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. சம்பவத்தன்று இந்தப் பெண் வைத்தியருடன் தென்பட்டுள்ளார். சல்வார் அணிந்திருந்தாராம். மேலும் அவருக்கு வயது 20களில் இருக்கலாம் என்றும் தெரிகிறது.
கொலைக்குப் பிறகு இந்தப் பெண் அங்குள்ள குரியர் நிறுவனத்திற்குப் போய் ஒரு பார்சலைக் கொடுத்துள்ளார். அந்தப் பார்சல் வைத்தியரின் மனைவி பெயருக்கு அனுப்பப்பட்டது. வைத்தியரின் மனைவி பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஆணுறுப்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பார்சல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடனடியாக இந்த ஆணுறுப்பை மருத்துவமனையில் ஒப்படைத்த போலீஸார் இது வைத்தியருடையதா என்பதைப் பரிசோதிக்க கோரியுள்ளனர். தற்போது இந்தப் பெண் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. காதல் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.