மீண்டும் உபாதைக்குள்ளாகிய அம்லா – நாளைய போட்டியில் ஆடுவது சந்தேகம்..!

450

amlaஇலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு223 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், தென் ஆப்பிரிக்க அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 29 ஓவர்களில் 176 ஓட்டம்பெற்றால் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டம் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை மண்ணில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக சந்தித்த 11–வது தோல்வி இதுவாகும்.

இந்த ஆட்டத்தின் 43–வது ஓவரில் இலங்கை தலைவர் சன்டிமால் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் தடுக்க முயன்ற தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா தரையில் விழுந்தார். விழுந்த அவரால் எழுந்திருக்க முடியவில்லை.

அணி உதவியாளர்கள் உதவியுடன் களத்தை விட்டு வெளியேறிய அம்லாவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இடது இடுப்பு பகுதியில் வலி அதிகமாக இருந்ததால் அவர் துடுப்பெடுத்தாட களம் இறங்கவில்லை.

இதுபோன்ற காயம் குணமடைய 3 முதல் 7 நாட்கள் பிடிக்கும். எனவே நாளை நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் ஏறக்குறைய அவர் விளையாட வாய்ப்பில்லை. 28–ந் தேதி நடைபெறும் 4–வது ஒருநாள் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

முதல் ஆட்டத்தில் கழுத்து வலியால் அம்லா களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சுமித், ஸ்டெயின் ஆகியோர் காயத்தால் இந்த தொடரில் இடம் பெறாத நிலையில் அம்லா மீண்டும் காயம் அடைந்து இருப்பது தென் ஆப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.