17 வருடங்களுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்த இலங்கைத் தமிழர் குடும்பம்..!

659


17 வருட காலமாக பல்வேறு இன்னல்களையும், பிரிவையும், துயரத்தையும் சந்தித்த ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்து சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

1996ம் ஆண்டு சேவலூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த தங்களது தாய் புஷ்பராணியிடமிருந்து பிரிந்து சென்னைக்கு வந்தனர் அவரது குழந்தைகளான தற்போது 23 வயதாகும் திணேஷ், 20 வயதாகும் திரானி, 19 வயதாகும் டென்னிஸ் ஆகியோர்.



அதற்குப் பின்னர் இவர்களால் மீண்டும் சந்திக்கவே முடியவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் இந்த நால்வரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

தாயை விட்டுப் பிரிந்து வந்த மூன்று குழந்தைகளும் சென்னைக்கு வந்தனர். அங்கு தங்க இடம் இல்லாமல், ஆதரிக்க யாருமில்லாமல் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் தங்கியிருந்தனர். ஒரு முறை இவர்களை அணுகிய ஒரு நபர், இவர்களை வேறு ஒருவருக்கு விற்க முயன்றுள்ளார். ஆனால் சிலநல்ல உள்ளங்களின் உதவியால் இவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.



தற்போது மீண்டும் தாயுடன் சேர்ந்துள்ள இந்த மூன்று பேரும் அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.



இவர்கள் அனாதரவாக சென்னையில் திரிந்தபோது சென்னை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியால் தத்தெடுக்கப்பட்டனர். அவர்களது உதவியால், திரானி பி.ஏ. படிப்பை முடித்தார். திணேஷ் கணித பட்டப்படிப்பை முடித்து தற்போது ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகிறார். டென்னிஸ் பிளஸ்டூ முடித்துள்ளார்.


மீண்டும் தாயுடன் சேர்ந்தது குறித்து திரானி கூறுகையில், மீண்டும் எங்களது தாயுடன் சேருவோம் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. எங்களது தாயார் உயிருடன் இருக்கிறாரா என்று கூட நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம். மீண்டும் இலங்கை செல்ல கடவுச்சீட்டுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

புஷ்பராணி கூறுகையில், நாங்கள் 1996ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தோம். அப்போது இலங்கையில் போர் உக்கிரமடைந்திருந்தது. டென்னிஸ் இந்தியாவில்தான் பிறந்தான். திரானி இலங்கையில் பிறந்தவள். என்னால் எனது மூன்று குழந்தைகளையும் வைத்துப் பராமரிக்க முடியவில்லை. இதையடுத்து எனது கணவருடன் குழந்தைளை அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.


நான் சவூதி அரேபியாவில் வீட்டு வேலை பார்க்கப் போய் விட்டேன். நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் நான் மீண்டும் முகாமுக்குத் திரும்பினேன். அதன் பிறகு என்னால் எனது குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்று விட்டேன் என்றார்.

தாயாரை விட்டுப் பிரிந்த இந்த மூன்று சகோதர, சகோதரிகளும், தங்களது தந்தையுடன் சென்னைக்கு வந்தனர். அங்கு கூட்டத்தில் தந்தையிடமிருந்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் தந்தையைப் பார்க்கவே இல்லை என்றார்.

தற்போது திரானிக்கு அவரது தாயார் இலங்கையில் மாப்பிள்ளை பார்த்து வைத்துள்ளாராம். நாடு திரும்பிய பின்னர் திருமணம் செய்யவுள்ளனராம்.

vavuniya