புலம்பெயர் எழுத்தாளர் செட்டிகுளம் ‘பசுந்திரா சசி அவர்களின்’ கட்டடக்காடு நாவலுக்கு சிறந்த நாவலிற்கான விருது!!

533

 
கடந்த வாரம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான வடமாகாண கலை இலக்கியப்பெருவிழா நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் கடைசிநாளான 24.10.2015 அன்று எழுத்தாளர்கள் கலைஞர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறந்த நாவலுக்கான விருது “கட்டடக்காடு” என்னும் புதினத்திற்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் சார்பாக அவரின் தந்தை சி.பசுபதி அவர்கள் விருதை பெற்றுக்கொண்டார் .

இந்நாவலானது பிரித்தானியா நொட்டிங்காம் பகுதியில் வசித்துவரும் பசுபதி சசிகரன் அவர்கள் – பசுந்திரா சசி – என்னும் புனைபெயரில் எழுதி கடந்த வருடம் லண்டன் லூசியம் அம்மன் ஆலய மண்டபத்தில் வெளியீட்டறிமுகம் செய்து வைத்திருந்தார்.

தாயகத்தில் வெளியீட்டு விழா வவுனியாவிலும் பின் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அறிமுக விழாவும் செய்யப்பட்டதோடு . கனடாவிலும் அறிமுக விழா செய்து வைக்கப்பட்டது.

கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சி.சிவசரவணபவன் அவர்களால் அணிந்துரை எழுதி எழுத்துலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவ் இளம் ஆசிரியரின் முதல் ஆக்கமான இந்நாவல் இலங்கை அரச விருதுக்காக இறுதி சுற்றில் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நாவல்களில் இடம் பெற்றதோடு இவ் ஆண்டு சிறந்த தமிழ் நாவலுக்கான ‘ இலங்கை கொடகே தேசிய சாகித்திய விருது-2015 ‘ ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டது.

நாவல் பற்றி முது பெரும் எழுத்தாளர்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள் .

” இந்நாவலின் எழுத்து வன்மை என்னை பிரமிக்க வைத்தது . இதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் , தகவல்கள் மிகவும் பயனுள்ளவை . அகழ்வாராய்ச்சி , காட்டு விலங்கு, ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள்- எழுதுவதற்கு கடும் உழைப்பை கொடுத்துள்ளமையை – காட்டுகின்றது . இந் நாவலாசிரியருக்கு அமோகமான எதிர்காலம் உண்டு ” என்றார்.
எழுத்தாளர் அ. முத்தலிங்கம் ( கனடா) அவர்கள் குறிப்பிடுகிறார்.

தினக்குரல் ஞாயிறு இதழ் 26.07.15 “ ஆதியின் மூலத்தை அசைக்கும் பறவை” என விழித்து இருந்தது.
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் வீரகேசரி வாரமலரில் ” கட்டடக்காடு- இலங்கை தமிழ் நாவல் வரிசையில் புதுமையான படைப்பு ” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் ‘ கிராமிய பண்பாட்டை முன் நிறுத்தும் படைப்பு’ என்றும். முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ‘ இளையோரால் பின்பற்றவும் சான்றோரால் அங்கீகரிக்கப்படவேண்டியதுமான எழுத்துக்கு சொந்தக்காரர் இவ் ஆசிரியர் ‘ என குறிப்பிடுகிறார்.

பசுந்திரா சசி –அவர்களின் பிற ஆக்கங்களான வீரகேசரி வாரமலரில் தொடர்கதையாக பிரசுரமாகிய “மடு” என்னும் நாவல் ( விரைவில் நூலுரு பெற உள்ளது.) மற்றும் 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள இவ் நாவலாசிரியர் மனம் நெகிழ்ந்து – புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஊட அகம் விற்பதிலே கவனம் செலுத்தும் அதே வேளை தமிழை வளர்ப்பதிலும் ஊக்கம் செலுத்த வேண்டும் – என வேண்டி நிற்கிறார்.

மேற்படி வேண்டுதல் நிறைவேற நாமும் துணைநிற்போம்.

மேலும் இவ் இலக்கிய பெரு விழாவில் விருது பெற்ற சக கவிதை, கதை ஆசிரியர்களாக .
மரபுக்கவிதை – அறுவடை- குருசுமுத்து இராயப்பு.
புதுக்கவிதை – சொல்லில் உறைந்து போதல் – முல்லை முஸ்ரிபா
சிறுகதை – நிலவு நீரிலும் தெரியும் – முருகேசு ரவீந்திரன் ஆகியோருக்கும் .
மேலும் அபுனைவு ( புனைவல்லாத ) படைப்பாசிரியர்களுக்கு விருகளும் , ஆயகலையில் தம்மை அர்ப்பணித்து மிளிர்ந்தவர்களுக்கு – முதலமைச்சர் விருதுகளும் – வழங்கப்பட்டன.

தமிழுக்காக உழைத்து விருது பெற்ற நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

திருமதி உதயகுமாரி விவேகானந்தராஜா .
பிரித்தானியா .
26.10.2015.

1 2 3 4 5 6