இலங்கை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா??

376

sl

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே தென்னாப்பிரிக்கா 180 மற்றும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி பல்லகலேவில் இன்று நடக்கிறது. தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிப்பதற்கு இந்த மோதலில் தென்னாப்பிரிக்கா கட்டாயம் வென்றாக வேண்டும். ஆனால் இலங்கை மண்ணில் அந்த அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் நிலை படுமோசமாக இருக்கிறது.

1993ம் ஆண்டில் இருந்து இங்கு தொடர்ச்சியாக 11 ஒரு நாள் போட்டிகளில் தென்னாஆப்பிரிக்கா தோற்று இருக்கிறது. இந்த நீண்ட கால சோகத்துக்கு இந்த போட்டியிலாவது தென்னாப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பார்க்கலாம். முந்தைய போட்டியில் காயமடைந்த அம்லா இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக குயின்டான் டி காக் இடம் பெற வாய்ப்புள்ளது.

இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல. முத்தரப்பு தொடரின் போது மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கி 2 போட்டிக்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் தலைவர் மத்யூஸ் இந்த போட்டிக்கு திரும்புகிறார். அவரது வருகை இலங்கை அணிக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும்.

அதே நேரத்தில் கடந்த போட்டியின் போது விரலில் காயமடைந்த திரிமான விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்த போட்டியுடன் தொடரை முடித்து விட வேண்டும் என்பதில் இலங்கை அணி தீவிரமாக இருக்கிறது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடலாம் எனவும் எனவே 2வது சுழற்பந்து வீச்சாளராக அஜந்த மென்டிஸ் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் மத்யூஸ் தெரிவித்தார்.