இந்திய ஹரியானா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் துத்வா கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை அவர் படிக்கும் அரசு பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்கள் பல மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவர்கள் யாருக்கும் தெரியாமல் 2 மருத்துவ தாதிகளின் உதவியுடன் கர்ப்பத்தை கலைத்துள்ளனர். கருகலைப்பு செய்த பிறகு சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தான் அவரது குடும்பத்தாருக்கு நடந்த விவரம் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தாரும் கிராமத்தினரும் அவர் படித்த பள்ளியை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளிக்குள் சில ஆசிரியர்களை பூட்டி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த 2 ஆசிரியர்களில் ஒருவர் விளையாட்டு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.