மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 17 வயது மாணவி ஒருவர் அவமானம் தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நைஹாட்டி என்ற இடத்தில் ஒரு வீட்டில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள்.
பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் தனியாக வீட்டிலிருந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த கவுதம் பஸ்வான் என்ற நபரும், மேலும் இரண்டு பேரும் தகாத முறையில் நடந்துக்கொண்டனர்.
மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், மாணவியை தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம் பக்கத்தினரை பார்த்தவுடன் கவுதம் பஸ்வானும், அவனது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
மாணவியை மீட்ட பொதுமக்கள், அவரது வீட்டில் பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி தனக்கு நேர்ந்த அவலத்தால் மனம் உடைந்து மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளான். அவனையும் அவனது நண்பர்களையும் தேடும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.