அனைத்து அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் : சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!!

815

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை (13.11.2015) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருக்கும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சமூக நீதிக்கானவெகுஜன அமைப்பு தனது முழு ஆதரவை வழங்குகின்றது என அவ் அமைப்பின் வன்னிப் பிராந்திய செயலாளர் சு.டொன்பொஸ்கோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ..

கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் என்றும் அவர்களுக்கு உதவியோர் என்றும் பல்வேறு குற்றங்கள் இழைத்ததாக சந்தேகித்து கைது செய்யப்பட்ட 217 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என பல தரப்பினரும் அடங்குகின்றனர்.

இவ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு பல்வேறு சாக்குப் போக்குகளை சொல்லி காலத்தை கடத்துகிறது. இவர்கள் அரசியல் கைதிகள் அல்ல எனவும் கூறுகின்றனர்.

இலங்கை இனப்பிரச்சினையால் ஏற்பட்ட யுத்தத்தை நிறுத்தி இனப்பிரச்சனைத் தீர்வுக்காக திம்பு, ஒஸ்லோ, டோக்கியோ என பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளை அரசியல் தரப்பாக ஏற்றே பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜே.ஆர். காலம் தொடக்கம் மஹிந்த காலம் வரையான அனைத்து அரசாங்கங்களும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். தற்போது அவர்களை பயங்கரவாதிகளாகப் பார்ப்பது நீதியாகாது. அரசியல் கைதிகளாகவே பார்க்கப்படவேண்டும்.

ஜே.வீ.பி இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை
முடிவுக்கு கொண்டுவந்த போது சகலருக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டமையை முன்னுதாரணமாகக் கொண்டு இவர்களுக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவேண்டுமென எமது அமைப்பு வலியுறுத்துகிறது.

அவ்வாறு செய்யாமல் விடுவதானது இனப் பாகுபாட்டை வலியுறுத்துவதாக அமைந்துவிடும். சிங்கள இனத்தவர்களுக்கு பொதுமன்னிப்பளிப்பதும், தமிழ் இனத்தவருக்கு பொதுமன்னிப்பளிக்க மறுப்பதும் காலங்கடந்த நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமனானதாகும்.

ஆகவே இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்ப இவர்களின் விடுதலை அத்தியாவசியமாகின்றது. எனவே தாமதமின்றி அனைத்து அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டுமென எமது அமைப்பு வலியுறுத்துகின்றது.

மேலும் இவர்கள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டமையால் இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பு நஷ்டஈடு வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம் எனஅவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12