தவறான தீர்ப்பால் 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த நபர்: 43 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு!!

315

wring_judgement_002

கனடா நாட்டில் நபருக்கு தவறான தீர்ப்பால் 27 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த நபர் ஒருவர் சுமார் 43 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவின் வான்கூவர் மாகாணத்தில் வசித்து வந்த இவான் ஹென்றி(தற்போதைய வயது 69) என்பவர் மீது 8 பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கடந்த 1983ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றங்கள் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு அவருக்கு 27 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அப்போதைய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். எனினும், தான் குற்றவாளி அல்ல என்ற கோரிக்கையுடன் அவர் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இருந்துள்ள நிலையில் அவர் 27 வருடங்கள் சிறையிலேயே கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஹென்றி குற்றமற்றவர் எனக்கூறி பிரித்தானிய கொலம்பியா நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. சிறையில் இருந்து வெளியே வந்த ஹென்றி, தன் மீதான பொய்யான குற்றத்திற்காக இழப்பீடு பெறும் முயற்சியில் ஈடுப்பட்டு தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார்.

ஹென்றியின் வழக்கறிஞரான ஜோன் லாக்ஸ்டன், ‘தவறான தீர்ப்பால் ஹென்றி சிறையில் கழித்த நாட்களை அவரால் ஒருபோதும் திரும்ப பெற இயலாது. அதேபோல், பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அந்த மனக்காயத்தையும் அவரால் போக்கிக்கொள்ள முடியாது.

ஆனால், தவறாக 27 வருடங்கள் சிறையில் கழித்ததற்காக அவருக்கு நீதிமன்றம் நிச்சயம் 43 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையானது அவர் இழந்த சந்தோஷங்களை மீட்டு தராது. ஆனால், எதிர்க்காலத்தில் இதுபோன்ற ஒரு தவறு நிகழக்கூடாது என்பதற்கு இந்த இழப்பீடு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்’ என அவர் தனது கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

நீதிமன்றம் மற்றும் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை வராத நிலையில், இந்த வழக்கு தொடர்பான விவாவதம் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.