
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் தண்டனைபெற்ற இளம் குற்றவாளியின் விடுதலைக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி தாக்கல் செய்த அவசர மனுவை, இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி இரவு ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஜோதி சிங் 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் டெல்லி, சிங்கப்பூர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் டிசம்பர் 29–ம் திகதி உயிரிழந்தார்.
உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு 17 வயதே ஆனதால் அவர் மட்டும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றய ஐவரில் ராம்சிங் என்பவர் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற 4 பேரான வினய், முகேஷ், பவன், அக்ஷய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் 6 பேரில் சிறார் கைதிதான், மருத்துவ மாணவியை அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும் சிறார் என்ற சட்டப்பிரிவால் அவர் தூக்கில் இருந்து தப்பி விட்டார்.
அவரது 3 ஆண்டு கால தண்டனை காலம் நேற்றுடன் முடிந்தது. இதனால், அவனை சிறைத்துறை நிர்வாகம் விடுதலை செய்தது.
இதற்கிடையே, சிறார் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிறார் கைதி விடுதலைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.
இது ஜோதிசிங் பெற்றோரிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஜோதி சிங் தாய் ஆஷாதேவி கூறுகையில், ‘‘நான் என் மகளை இழந்து விட்டேன். குற்றம் வென்று விட்டது’’ என்றார்.
சிறார் குற்றவாளிக்கு தற்போது 20 வயதாகிறது. அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் எங்கு செல்வார் என்ற தகவல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் படவுன் மாவட்டத்தை சேர்ந்த இவர் மிகசிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு சென்று விட்டார். அவனுக்கும் குடும்பத்துக்கும் இருந்த தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது.
அவர் உயிரோடு இருப்பானா? என்ற சந்தேகம் குடும்பத்துக்கு ஒரு கட்டத்தில் ஏற்பட்டது. இந்நிலையில், ஜோதி சிங் வழக்கு தொடர்பாக கடந்த 2012–ல் அவர் கைதான பிறகே ஒழுக்கம் இல்லாதவனாக மாறி விட்டதை பெற்றோர் உணர்ந்தனர்.
அவர் மீது உறவினர்கள் அனைவரும் வெறுப்பில் உள்ளனர். எனவே அவர் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு சென்று அவசர விடுமுறை மனு (ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன்) தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், இம்மனுவின்மீது இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்தப்படும். வரிசைக்கிரயப்படி, மூன்றாவது வழக்காக இந்த மனுமீது விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அவனது விடுதலைக்கு எதிரான தடை உத்தரவு எதுவும் விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிறார் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என டெல்லியில் போராட்டம் நடத்திய ஜோதி சிங்கின் பெற்றோர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 40 பேரை நேற்று பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இளம்குற்றவாளி இன்று விடுதலையாவது உறுதி என்றாகி விட்டபடியால் அவரது முகத்தை சமூகத்துக்கு வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியின் பல பகுதிகளில் ஊடகங்களை சேர்ந்த புகைப்பட கலைஞர்களும், வீடியோகிராபர்களும் விழிப்புடன் கண்காணித்து வந்த நிலையில் நேற்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் தாக்கல் செய்த அவசர மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அவரது தண்டனையும், காவலையும் நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் ஏ.கே. கோயல், யூ.யூ. லலித் ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.





