வன்னி அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக காதர் மஸ்தான் ஜனாதிபதியினால் நியமனம்!!

652

Masthan-MP

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவராகவும் மேற்படி மூன்று மாவட்டங்களினதும் 15 பிரதேச செயலகங்களினதும் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும் வன்னிமாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கபட்டுள்ளார்.

மேற்படி நியமனம் தொடர்பாக நியமனத்தின் பிரதிகள் ஜனாதிபதியினால் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான வர்தத்க கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாரே மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான வர்தத்க கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆகியோருக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும், மன்னார் மாவட்டத்தினுள் உள்ள பிரதேச செயலாளர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான வர்தத்க கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும், முல்லை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்களினுள் உள்ளடங்கும் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள்ளும் அரச, அரச சார்பற்ற சகல அபிவிருத்திப் பணிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்களாகவும், அமுல்படுத்துனர்களாகவும் அவற்றை மேற்பார்வை செய்பவர்களாகவும் இவ் இணைத் தலைவர்கள் செய்லபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் இலங்கையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு சிறுபான்மை பிரதிநிதியாகவும் திகழ்வதுடன் இலங்கையின் மூன்று நிர்வாக மாவட்டங்களுக்கு அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சரல்லாத ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனமத பேதங்களுக்கு அப்பால் மூவின மக்களுக்கும் சேவையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் ஜனாதிபதியினால் இவ்வாறு நியமிக்கப்பட்டமை தொடர்பில் மூன்று மாவட்டங்களிலிருந்தும் சமயத் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்கள், மற்றும் பொது மக்களும் நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தவண்ணமுள்ளனர்.