இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு..!

425

ilavarasan

தமிழகத்தின் தர்மபுரி இளவரசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணைகுழு முன்பு ஆஜராக திவ்யா மற்றும் இளவரசனின் தந்தை இளங்கோவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி நத்தம் கொலனியை சேர்ந்த இளவரசன் – திவ்யா இருவரும் கடந்த ஆண்டு காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த 4ம் திகதி இளவரசன் அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இளவரசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை இளங்கோ நீதிமன்றத்தில் மனு செய்தார். இதன் பேரில் தர்மபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசன் உடலை, டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

இதற்கிடையில் இளவரசன் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலுவை கொண்ட ஒரு நபர் ஆணைகுழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணைகுழு விசாரணை நடத்தி வருகிறது. இப்போது திவ்யா, இளவரசனின் தந்தை இளங்கோவுக்கும் நேற்று சம்மன் வழங்கப்பட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு கமிஷன் முன்பு நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.