பாகிஸ்தானில் பொலிஸ் மாதிரி நடித்து 300 கைதிகளை விடுவித்த தாலிபான் தீவிரவாதிகள்..!

780

taliban

பாகிஸ்தானில் பொலிஸ் சீருடையில் சென்று சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு மின்மாற்றியை தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர்.

அவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள். நேற்று மாலை அச்சிறைக்கு பொலிஸ் சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தாலிபன் தீவிரவதிகள் உள்ளே வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அவர்களின் அதிரடித் தாக்குதலால் சிறையின் வெளிப்புறத் தடுப்புச் சுவர் சுக்கு நூறானது.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். போதாக்குறைக்கு ராணுவத்தினரையும் உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால், இறுதியில் சிறையில் இருந்த 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது தாலிபன் குழு.

இக்கொடூரத்தாக்குதல் சம்பவத்திற்கு டெஹ்ரீக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப்படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிகப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரியான ஷாஹிதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளதை சிறைத்துறையின் ஆலோசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார். மேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் முன்யோசனையாக சிறைக்கு மின்சாரம் அளிக்கும் இரண்டு மின்மாற்றிகளையும் குண்டு வீசித் தாக்கி சிறைச்சாலையை இருட்டாக்கியுள்ளனர். தப்பிச்செல்லும் போது காவலர்கள் தங்களை துரத்தி வர இயலாதவாறு வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.