துருக்கியில் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டங்கள்..!

468

துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் உயிரிழக்கக் காரணமான தோட்டா யாருடைய துப்பாக்கியில் இருந்து வந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இஸ்தான்புல்லில் திங்கள் இரவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலவரக் கட்டுப்பாட்டு பொலிசாருக்கும் இடையே மோதல்கள் நடந்தன.பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் இருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் பிரிவினர் பலப்பிரயோகம் செய்வதைக் கண்டித்து இரண்டு நாள் வேலைநிறுத்தம் ஒன்றை பொதுத்துறை ஊழியர்கள் சங்கம் செவ்வாயன்று ஆரம்பித்துள்ளது.

தீவிரப் போக்குடையவர்கள் எனக் கூறி இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நிராகரித்த துருக்கியப் பிரதமர் ரெஜெப் தையிப் எர்தொவான், எதிர்க்கட்சிகள் பின்னால் இருந்து அரங்கேற்றுகின்ற ஆர்ப்பாட்டங்கள் இவை என்று கூறினார்.

கடந்த ஞாயிறன்று இஸ்தான்புல்லில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.