ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த மாணவி..!!

537


fire

தமிழ்நாடு அரியலூரில் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியையும் திட்டியதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அரியலூர் மாவட்டம் பள்ளக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சாந்தினி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பி இருக்கிறார்.

வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த சாந்தினி திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்னையை தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோரும் அருகில் இருந்தவர்களும் எவ்வளவோ காப்பாற்ற முயற்சி செய்தும் சாந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சாந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாந்தினி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.



அந்த கடிதத்தில் நான் நேற்று பள்ளியில் இருந்தபோது வகுப்பு ஆசிரியை என்னை சக மாணவியர்கள் முன் அவமானப்படும்படி திட்டிவிட்டார். அதேபோல் தலைமை ஆசிரியையும் என்னை திட்டியதோடு நீ நாளை பள்ளிக்கு வரும்போது உன் பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று கூறினார்கள்.


இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கடிதத்தை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.