இந்தியாவின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா!!

371

Telangana

இந்திய நாட்டின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா. ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

டெல்லியில் இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய லோக் தளத் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் இப்புதிய மாநில உருவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், தெலுங்கானாவுக்கும் ஆந்திர மாநிலத்துக்கும் பொதுதலைநகராக 10 ஆண்டுகாலத்துக்கு ஹைதராபாத் நீடிக்கும் என்றார்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி ஒப்புதல் தெரிவிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதால் சீமாந்த்ரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அங்கு துணை ராணுவப் படையைச் சேர்ந்த 1200 பேர் ஏற்கெனவே குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 1000 பேரை கொண்ட துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஆயுதப் படை பொலிசார், தமிழக ஆயுதப் படை பொலிசார் ஆகியோரும் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.