வவுனியா செட்டிக்குளத்தில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

703

 
வவுனியா – முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து இன்று(20..01.2016) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் உள்ள பாடசாலை முன்றலில் சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்றது.
கடந்த மூன்று வருடங்களாக இந்த பாடசாலையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் 2013ஆம் ஆண்டு பாடசாலையின் கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் 100 சதவீதமாக இருந்த கணிதபாட சித்தி, இன்றைய காலப்பகுதியில் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள இந்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் கூட கணிதம் மற்றும் விஞ்ஞானம் பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையால் உயர்கல்வியை தொடராது படிப்பை இடைநடுவே கைவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல தடவை பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விரைவாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்த போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 2 3 4