மாணவர்களின் கல்விக்கு அப்பால் ஒழுக்கம்  சீருடை  போன்ற விடயங்களில் பாடசாலையுடன்  பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்கு என்ன?

1050


11111

கல்வி முன்னேற்றமும் மாணவர்களின் ஒழுக்க வாழ்வும் சம அளவில் முன்னேற வேண்டும் என்பதே கல்வித்துறை சார்ந்தவர்களதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பாகும். கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்திற்கு தவிர்க்க முடியாத பங்கு இருக்கின்றது. மாணவர்களின் ஒழுக்கத்தில்; முன்னேற்றத்தை நிரூபிக்காத பாடசாலை அதன் வேறு எந்த முன்னேற்றத்தைப் பற்றியும் பெருமைப்பட முடியாது. அந்த அளவு கல்வி என்ற கருத்தோடு மாணவர்களின்ஒழுக்கமும்சம்பந்தப்பட்டுள்ளது. நல்லொழுக்கம்,மனிதப் பண்புள்ள நல்ல நடத்தைகள்,ஆளுமை வளர்ச்சி எல்லாவற்றையும் பாடசாலை ஊடாக பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். நவீன கல்வியும் அவ்வாறுதான் மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களைவகுத்துள்ளது.  ஆனால்மாணவர்களின் ஒழுக்கம் என்பதை ஒரு தனிக் கருத்தாக ஆராயும்போதும் ஆளுமை வளர்ச்சி பற்றி நோக்கும் போதும் அதில் பாடசாலையை மட்டும் குறை காண்பது பொருத்தமானது அல்ல. பெற்றோர்களினதும் சமுதாயத்தினதும் பங்கு முக்கியமானதாகும். பாடசாலையை விட அதிகமான நேரத்தை ஒரு பிள்ளை பெற்றோர்களோடும் குடும்பத்தவர்களோடும் செலவிடுகின்றது. பாடசாலைக்கு வெளியே உள்ள நண்பர் குழாமும் சமுதாயமும்  ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தாக்கம்செலுத்துவதைநாம்உணர்வோம். 

கல்வி அறிவும் ஒழுக்க  வளர்ச்சியும் ஒன்றாக சேர்ந்து வளரக்கூடிய ஒரு குடும்ப சமூக அமைப்பு எமக்குத் தேவைகுழந்தைகளின் எதிர்காலம் சமூகம் என்ற வகையில் எமது கைகளில் ஒப்படைக்கபட்டுள்ளது. ஒரு பிள்ளை அடைகின்ற வெற்றியும் தோல்வியும் எம்மைச் சார்ந்துள்ளது. ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக இருக்கப்போகின்றது என்பது நாடும் சமூகமும் நாங்களும் வழங்கும் சேவைகளில் தான் தங்கியுள்ளது.அதாவது ஒருகுழந்தையின்எதிர்காலம்சமூகத்தின்கைகளில்தங்கியுள்ளது. பாடசாலை முக்கியமானது. அதிபரின் தலைமைத்துவம் இன்றியமையாதது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் கவலையும் மிக முக்கியமானது. எல்லாவற்றையும் விட பெற்றோரினதும் சமூகத்தினதும் பொறுப்பு மிக முக்கியமானதாகும். பாடசாலை மற்றும் கல்வி மாணவர்களின் முன்னேற்றம் என்ற விடயங்களை சரியாக உணர்ந்து அவற்றில் போதுமான வெற்றிகளைப் பெறுவதற்கு சமூகம் அதிக பொறுப்புக்களையும் சேவைகளையும் ஆற்ற வேண்டியுள்ளது. தனிபட்ட விருப்பு வெறுப்புக்கள், தலைமைத்துவ மோகம்,அரசியல் வாதிகளின் ஆதிக்கம், குறுகிய நோக்கங்கள் என்பவற்றில் இருந்து விடுபட்ட ஒரு கல்விச் சூழல் அவசியமானதாகும். இதைத் தான் வளர்த்தெடுக்க நாம் பாடுபட வேண்டும். கல்வி முன்னேற்றம் என்ற ஒரு பொது நோக்கம்தான் எங்கள் இலட்சியமாக இருக்க வேண்டும்.


கல்வி வளர்ச்சியில் மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சி முக்கியமானது என்று நாம் பாரத்தோம். மாணவர்கள் படித்தவர்களாகவும் நல்லவர்களாகவும் வருவார்களா? இதுதான் பிரதான கேள்வி. மாணவர்களிடம் நல்ல பழக்க வழக்ங்களை உருவாக்குவதில் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் அதிக பொறுப்பு உள்ளது. சாதகமான நடத்தைப் பண்பு மாணவனில் அல்லது ஒரு மாணவியில் உருவாக்க முயற்சிகள் வேண்டும் இன்னொரு வகையில் சொல்வதானால் ஒழுக்க அறிவு விளக்கத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய இயல்தகைமை உள்ளவர்களாக மாணவர்கள் ஒழுக்க ரீதியில் பயிற்றப்பட்ட வேண்டும். இதை நாங்கள் ஆங்கிலத்தில் ‘Moral Reasoning’ என்று கூறுவோம். ஒழுக்கம் என்று கூறுவதன் முக்கிய பகுதி இதில்தான் அடங்கியுள்ளது. 8ம் வகுப்பு வரை ஒரு வித கிளிப்பிள்ளைப் பாடமாக ஒழுக்கம் பயிற்றபட்டு வந்தாலும் மாணவனுடைய ஒழுக்க அறிவு வளர்ச்சிக்கு அது போதுமானது அன்று. ஒழுக்க அறிவு விளக்கம் அல்லது

Moral Reasoning என்பதை நோக்கி அவனுக்கு பயிற்சி ஓரளவாவது தரப்பட வேண்டும். ஏனெனில் இதுதான் மாணவர்களுக்கு நல்வாழ்க்கையை உருவாக்குவதற்கு தீர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அல்லது மேற்கொள்ளக்கூடிய ஆற்றலை வழங்குகின்றது.


ஒழுக்கப் பெறுமானங்கள் தொடர்பில் moral reason ஒரு பாரிய முன்னேற்றத்தை உருவாக்கும். ஆனால்; அதற்கான பாட நெறிகளோ பயிற்றுவிப்புக்களோ பாடசலையிலும் சமூகத்திலும் இன்று இல்லை. ஆனால் அனுபவ முதிர்ச்சியின் ஊடாக இதனை தற்போதைய நிலையிலும் ஆரம்பிக்க வாய்ப்புக்கள் உள்ளன. அதேவேளை இதற்கான கல்வித் துறை ரீதியாக ஒழுக்க பயிற்றுவிப்புக்களை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெற்றுத் தரக்கூடிய பயிற்சிகள் தேவையாக உள்ளது.

அதாவது ஒழுக்கத் தீர்மானங்களும் ஒழுக்கப் பிரச்சினைகளும் 40 அல்லது 50 வருடங்களுக்கு முற்பட்ட விதத்தில் இன்று சமூகத்தில் இல்லை. குறிப்பாக இன்றையை பாடசாலை மாணவன் அல்லது மாணவி எதிர்நோக்கும் ஒழுக்க ரீதியான பிரச்சினைகளும் சவால்களும் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கக்கூட முடியாதவையாக இருக்கலாம். ஆகவே ஒழுக்கத்தை மாணவருக்கு கற்றுக் கொடுப்பதிலும் பயிற்றுவிப்பதிலும் திருத்தமானதும் உயர்வானதுமான வழிமுறைகள் இன்று தேவையாக உள்ளன. பழைய முறைகள் பயனளிக்கும் என்று நான் கருதவில்லை.

இன்னொரு புறத்தில் பெரியவர்களின் அல்லது வளர்ந்தவர்களின் முதிர்ச்சியான நடவடிக்கைகளும் ஒழுக்க நடத்தைகளும் ஒழுக்க விபரிப்புக்களும்தான் சரியாக செயல்பட வேண்டும். பாடசாலை ஆசிரியர்களை விட இவர்கள்தான் மாணவர்களுடன் நேரடியாக தொடர்பு பட்டிருப்பவர்கள். பள்ளிக்கூடத்தை விட அதிகமான காலத்தை ஒரு மாணவன் பெற்றோர்களோடும் குடும்ப அங்கத்தவர்களோடும் செலவிடுகின்றான். ஒழுக்க மற்றும் பண்பாட்டு விடயங்களை பெரியவர்கள்தான் மாணவர்களுக்கு கடத்துகின்றனர். மாணவர்களின் மனதில் பதிய வைக்கின்றனர்.

இந்தக் கருத்தினுடைய முக்கியத்துவம் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும். அதாவது பெற்றோர்களின் பங்கு மாணவனின் ஒழுக்க வாழ்வைப் பொறுத்த வரை மிக முக்கியமானது என்பதுதான் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் பெற்றோர்கள்தான் தமது பிள்ளைகளுக்கு நேரடியான முன்மாதிரிகளாக இருக்கக்கூடியவர்கள். ஒழுக்கத்தை பிள்ளைக்கு ஊட்டி வளர்ப்பவர்களும் அவர்கள்தான்.


ஒழுக்கத்தை பொறுத்த வரை பாடசாலையின் பொறுப்பின் அளவு அல்லது அதற்கு மேலாக பெற்றோருக்கு பொறுப்பு இருக்கின்றது. தற்கால கல்வி மற்றும் சமூக சூழலில் இது அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றது. இருந்தபோதும் தற்கால பரபரப்பான வாழ்க்கை முறை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நீண்ட இடைவெளியை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களிடம் இருந்து நேரடியாக ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வசதி இல்லாத அல்லது நேரம் இல்லாத நிலையை இது தோற்றுவிக்கின்றது. வேலைப்பழு காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பு பிள்ளைகள் விளங்கிக் கொள்ள வேண்டிய நல்லது, கெட்டது பற்றி விளக்கமளிக்க பெற்றோரினால் முடியாமல் உள்ளது. ஆகவே வீட்டுச் சூழலில் ஒரு குறைபாடு இயல்பாக உருவாகின்றது என்று கூறலாம்.

அடுத்ததாக வீட்டுக்கு வெளியே உள்ள சுற்றாடல் வீட்டின் நிலையை விட வேறுபட்டதாக அல்லது மோசமானதாக இன்று மாறியுள்ளது. வன்முறை, மோசமான வீடியோ படக்காட்சி வசதிகள், பீடா வெற்றிலை,போதை வஸ்த்துப் பாவனை, தூள் வகைகள் என்பவற்றிற்கும் பிள்ளை இலகுவில் தன்னை இழக்கின்றது. இது பாடசாலையினாலும் பெற்றோரினாலும்கூட கையாளப்பட முடியாத அளவு ஒரு பாரிய சமூகத் தீங்காக மாற்றம் அடைந்துள்ளது. அநேகமான இடங்களில்  இதனுடைய தாக்கம் இருப்பது பற்றி ஆய்வுகள் மூலமாகவும் பத்திரிகைச் செய்திகள் இணையதளங்கள்  மூலமாகவும் நாம் அறிந்து வருகின்றோம். இது பாடசாலையின் ஒழுக்க கட்டமைப்பையும் குடும்பங்களின் இயல்பான நெறிமுறையான அமைப்பையும் உடைத்தெறிகின்றது.

ல்வேறு விதமான முறைகேடான செயல்கள் இவற்றின் விளைவாக இளம் சந்ததியினரை தாக்கி வருவது பற்றி  கவலைக்குரிய உதாரணங்கள் பல எமது கவனத்திற்கு வந்துள்ளன. போதை வஸ்த்து,மோசமான வீடியோ,பீடா பாவனைகள் என்பவற்றை ஒரு பிள்ளைக்கு பெற்றோர் பழக்குவதில்லை. ஆனால் இதை பிள்ளை தான் வாழும் சமூகத்தில் இருந்து அல்லது வீட்டுக்கு வெளியே இருந்து கற்றுக் கொள்கின்றது. ஆகவே வீட்டுச் சூழல் சரியாக இருந்தாலும் பாடசாலை சூழல் ஒழுங்காக இருந்தாலும் சமூகத்தில் காணப்படும் இத்தகைய தீய வழிமுறைகள் மாணவர்களையும் இளைஞர்களையும் நிச்சயம் பாதிக்கும்.

சமூகத்தின் தவறான செல்வாக்கு ஒரு குழந்தையை முற்றாக நாசப்படுத்த முடியும். தவறானவர்களையும் தவறானவற்றையும் சிறுவர்கள் முன்  மாதிரிகளாக கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் இன்று அதிகமாக உள்ளன. அதைச் சமூகம்தான் கற்றுக் கொடுக்கின்றது. வன்முறைகளினாலும் பாலியல் தொடர்புகளினாலும் ஏமாற்று வேலைகளினாலும் காடைத்தனங்களினாலும் முன்னேற முடியும். ஏதோ ஒரு வகையில் சமூக அந்தஸ்த்தைப் பெற முடியும் என்று சமூகத்தில் இவற்றிற்கு ஒரு மதிப்பீடு தரப்படுகின்றது. வாழ்வில் விரைவாக வெற்றி பெற வேண்டுமானால் நேர்மையான வாழ்வினால் பயனில்லை என்பது போன்ற உணர்வுகளை சிறுவர்கள் சமூகத்திடம் இருந்துதான் தெரிந்து கொள்கின்றனர்.

இந்த மாதிரியான தீய கேடான விடயங்களை பெற்றோர்களும் சமூகமும் கண்டிக்காததில் இருந்தும் இவற்றைத் தட்டிக் கழித்து வருவதில் இருந்தும் சிறுவர்களும் இளைஞர்களும் இவற்றிற்கு பலியாகின்றனர். அதிகமான பெரிய பாடசாலைகளில் வயது வந்த மாணவர்கள் வன்முறை விடயங்களில் அக்கறையுள்ளவர்களாக இருப்பது மறைக்கப்படக்கூடிய ஒரு விடயம் அல்ல. வன்முறை, வயதை மீறிய பாலியல் தொடர்பு, ஏமாற்று, போதை வஸ்த்துப் பாவனை, பெற்றோருக்கும் பாடசாலைக்கும் கட்டுப்படாத நிலை போன்ற பிரச்சனைகளால் இளம் மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கைகள் பல இடங்களில் சீர் குலைந்திருப்பதோடு அது சமூகத்தின் கவலையாகவும் மாறியிருக்கின்றது. 

இவ்வாறான  விடயங்களில்  இருந்து  மாணவர்களை பாதுகாக்க பாடசாலை நிர்வாகங்கள் மட்டுமல்ல  பெற்றோரும் சமுதாயமும் மிககூடிய கவனமெடுத்து செயல்பட வேண்டும் .

மாணவர்களின் நடை உடை  முதல் சிகையலங்காரம் வரை கூடிய கவனத்துடன் செயல்பட்டுபாடசாலை மாணவர்கள்  சீருடை  என்னும் வரைமுறைகளுக்கு அமைவாக செயல்படுவதற்குபாடசாலைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் .

அதாவது பாடசாலை மாணவர்களது சீருடைகளை தைக்கின்ற தையல் கடைக்ககாரர்கள்  சீருடைகளை தைக்கின்றபோது பொதுவான ஒரு முறையை கடைப்பிடிக்கவேண்டும்.  அண்மைகாலங்களில்  தென்னிந்திய சினிமா ஹீரோக்களுக்கு இணையாக தங்களை காட்டிக்கொள்ள பெருமளவில்  எத்தனிக்கின்றனர்.  மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அஜித் விஜய் சூரியா தனுஷ்  என  பாவனை பண்ணிகொள்ளும் அளவுக்கு தென்னிந்திய  சினிமா  மாணவர்களது சீருடை மற்றும்   சிகையலங்காரம் என்பவற்றில் செல்வாக்கு செலுத்தி நிற்கிறது. இந்த நிலையை  மாற்ற   ஒவ்வொருவரும்   அதாவது  மாணவர்களது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பொதுவான (General Uniform Style ) ஒன்றினை பின்பற்றி  சீருடைகளை தைப்பதன் மூலம்   பாடசாலை  மாணவர்கள் அனைவரும் பாடசாலைகளில் ஒரே முறையில் சீருடை அணியும்  பழக்கத்தை  ஏற்படுத்த ஒத்துழைக்கவேண்டும்.

அதேபோன்று  பாடசாலை மாணவர்களது சிகையலங்காரம் என்பதும் மாணவர்களது தோற்றபாட்டை(appearance) மாற்றிவிடும் அளவுக்கு அல்லது  மாணவர்களிடையே  வேறுபாட்டினை   அல்லது ஏற்றத்தாழ்வுகளை  வெளிப்படுத்துகின்ற அளவுக்கு ஒவ்வொரு மாணவரது சிகையலங்காரமும் காணப்படுகிறது .

சிகையலங்கார நிலையங்களில் இப்பொழுது இருக்கின்ற  தென்னிந்திய சினிமா ஹீரோக்களதும்  மற்றும் கிரிகெட் உதைபந்தாட்ட  வீரர்களது  சிகையலங்காரங்களுக்கு  ஒப்பான முறையில் தங்களது சிகையலங்காரமும் இருக்கவேண்டும் என வற்புறுத்தியே  தங்களது சிகையலங்காரத்தை மேற்கொள்கின்றனர்.சில பாடசாலை மாணவர்கள் தங்களது முடிக்கு வர்ணம் பூசி வருவதையும் நாம்  அன்றாடம் பாடசாலைகளில் காணுகின்றோம்.

எனவே இந்த நிலையை  மாற்றி  பாடசாலை மாணவர்களுக்கென பொதுவான சிகையலங்காரத்தை மேற்கொள்ள சிகையலங்கரிப்பாளர்கள்  அனைவரும் முன்வர வேண்டும். இதனூடாக  பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சீருடை மற்றும் சிகையலங்காரம் என்பவற்றினூடாக  மாணவன் தன்னை மாணவன் என்று உணரும் தன்மைக்கு  ஆளாக்கக் வேண்டியது   இன்றைய சமூகத்தின் தலையாய கடமையாகும் .

தொகுப்பு :பண்டிதர்

.