இரவோடு இரவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!!

540

seenivasan

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள் முடிவுக்கு வந்துள்ளன. ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெயர் அடிபட்டு அவரை மும்பை போலீஸார் தேடத் தொடங்கியதும் சீனிவாசனுக்கு சிக்கல் வந்தது.

அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆரம்பத்தில் முடியாது என்று கூறி வந்தார் சீனிவாசன். ஆனால் நெருக்கடி அதிகரிக்கவே, விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். மேலும் அந்த கமிஷனின் விசாரணை முடியும் வரை தான் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பதாகவும், அதுவரை ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை வாரியத்திடம் ஒப்படைத்தது. அதில் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் நல்லவர்கள், தவறு செய்யவில்லை, அப்பாவிகள் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில் சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் மீதும் எந்தத் தவறும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மீண்டும் தலைவர் பதவியை ஏற்க முடிவு செய்தார் சீனிவாசன். விசாரணைக் கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் பதவியேற்கப் போவதாக வாரிய உறுப்பினர்களுக்கு அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் தலைவர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் நிரபராதிகள், தவறு செய்யாதவர்கள் என்று எப்படி பிசிசிஐயின் விசாரணைக் கமிஷன் கூறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

ஆகஸ்ட் 2ம் திகதி வாரியத்தின் செயற் கூட்டம் கூடுகிறது. அப்போது மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பிரச்சினை எழுப்ப நிர்வாகிகள் பலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.