துப்பாக்கிப் பிரயோகத்தில் எந்த ஒரு மாணவனும் பலியாகிவிடக்கூடாது : வவுனியாவில் நீதிபதி இளஞ்செழியன்!!

646

DSC06400

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வவுனியாவில் கடமையாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல. அப்படி இருந்தும் சட்டம், நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதற்காக என்னால் இயன்ற வரையில் கடமையாற்றினேன் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நுழைவாயில் திறப்புவிழா வைபவத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்hளர்.

பழைய மாணவர்கள் ஒரு தொகுதியினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் நீதிபதி இளஞ்செழியன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பாடசாலை அதிபர் மரியநாயகம் தலைமையில் நுழைவாயிலைத் திறந்து வைத்தார்.

அவருடன் மன்னார் மாவட்ட நீதிபதி ஜே.அலெக்ஸ்ராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பிரபாகரன், வவுனியா அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, முன்னாள் பாடசாலை அதிபர் பத்மநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றிய நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்ததாவது..

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வவுனியாவில் கடயைமாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல. ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக மன்னார் உட்பட வன்னிப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகருக்குள் வருவார்கள். அதேபோன்று அனுராதபுரம் பகுதியில் இருந்து வியாபார நோக்கத்திற்காகப் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருவார்கள். இதனால் வவுனியாவில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரை நடமாடினார்கள்.

அது மட்டுமல்ல. அந்த மக்கள் கூட்டத்திற்குள்ளே, பெரும் எண்ணிக்கையானவர்கள் பிஸ்டலுடன் சுற்றுவார்கள். புலியினுடைய புலனாய்வு, புளொட், டெலோ, ஈரோஸ், ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ் என்று இருக்கின்ற எல்லா குழுவினரும் நடமாடினார்கள். அத்துடன் ரீஐடி, சிஐடி, ஆமி இன்டலிஜென்ட், நேவி இன்டலிஜன்ட், கருணா குரூப், பிள்ளையான் குரூப் இப்படி எல்;லோரும் சிவிலுடையில் பிஸ்டலுடன் நடமாடுவார்கள்.

இவர்களையெல்லாம் தாண்டி, நாங்கள் சட்டம், நீதி, நேர்மை, நியாயம், தரமம் என்பவற்றை நிலைநாட்ட வேண்டிய ஒரு கடமைப் பொறுப்பில் தான் அப்போது நாங்கள் இருந்தோம். அந்தக் கடமைப் பொறுப்பை நான் என்னால் இயலும் வரையில் செய்தேன்.

இப்போது வவுனியாவுக்கு வந்தபோது பிறந்த மண்ணிற்கு வந்த ஓர் உணர்வு ஏற்படுகின்றது. வவுனியாவில் நிகழ்வு என்றதும், உடனே அதில் கலந்து கொள்ள வருவேன் என்று என்னுடன் தொடர்புகொண்ட விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தேன். ஏனெனில் அந்த அளவுக்கு வவுனியாவுடனான எனது உறவு இறுக்கமானது, உணர்வுபூர்வமானது.

வவுனியாவில் கடமையாற்றிய காலத்தில் 1500 சடலங்களைப் பார்த்திருக்கின்றேன். அவற்றிற்கு மரண விசாரணை நடத்தியிருந்தேன். இராணுவத்தினர், விடுதலைப்புலிகள், சகோதர இயக்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என, தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று மூவினத்தையும் சேர்ந்த அவர்கள் அனைவரும் இலங்கை மாதாவின் புதல்வர்கள்.

அந்தக் காலப்பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு உயிர் பிரிந்தவுடனேயே, அந்த சடலங்களை நாங்கள் பார்த்தோம். சிந்திய இரத்தம், சிதறிய உடற்பாகங்களையும் கண்டோம். அப்போது அவலக்குரல்கள், ஐயோ என்று அலறும் கதறல்கள் அனைத்தையும் எங்கள் காதுகள் கேட்ட வண்ணம் இருந்தன. ஆனால் அப்போது எங்களுக்குக் கண்ணீர் வரவில்லை. நீதிபதிகள் அப்படித்தான் இறுக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறே நாங்கள் இருந்தோம். ஆனால் வீட்டிற்குச் சென்ற பின்னர் அந்தக் காட்சிகள் எங்களைக் கண்ணீர் சிந்தச் செய்திருந்தன.

இந்த கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்ற மாணவர்கள் குழுவினர் செய்திருப்பதை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய பழைய மாணவர்களும் சிறிய சிறிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் உதவிபுரிய முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.