வவுனியாவில் தனியார் பேருந்து – இ.போ.சபை சாரதிகள் கைகலப்பு : இருவர் கைது!!

602

Fight

வவுனியாவில் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகளுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று வவுனியா, ஏ9 வீதி, கொக்குவெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,

பருத்தித்துறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றும் முகமாக புளியங்குளம் பகுதியில் இருந்து போட்டிக்கு ஓடியுள்ளன.

இதன்போது இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து வவுனியா, கொக்குவெளிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீர் என பிறேக் அடித்துள்ளது. பின்னால் வந்த தனியார் பேரூந்து அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்கி இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி மீது தாக்கியுள்ளனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைகலப்பில் ஈடுபட்ட தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.