மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள் : ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

408

mathu

இந்திய அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும் மாணவர் விஜயகுமாரும் சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கலைந்து போக சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் அமைதியான வழியில் போராடுவதாக கூறியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அவர்களை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். அவர்களுக்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதேபோல் சென்னையில் இருந்து ஈழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜோன் பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து மதுரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை இழுத்து மூடிப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவது மதுவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஈழப் போராட்டம் போல மாணவர்களின் மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.