
இந்தியாவிலிருந்து ஹெரோயினை இடுப்புப் பட்டிகளில் மறைத்து கடத்தி வந்த இலங்கைப் பெண்ணுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜாஎல பள்ளிவீதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிகே தொன் சந்த்ராணி என்ற 54 வயது பெண்ணுக்கே நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நீண்ட வழக்கு விசாரணையின் பின் 8 வருடம் விளக்கமறியலில் இருந்த நிலையில் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005 ஜூலை 8ம் திகதி இந்தியாவிலிருந்து இப்பெண்மணி கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய போது இவரில் சந்தேகம் கொண்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இவரது பொதிகளை சோதனை செய்தபோது இவர் கொண்டுவந்த பொதியில் இருந்து 474 இடுப்புப் பட்டிகளில் சூசகமான முறையில் ஹெரோயின் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றில் சுத்தமாக ஹெரோயின் 141.8 கிராம் இருந்ததாக தெரிய வந்தது. இவர் மீது போதைப் பொருளை கடத்தி வந்தமை தன்வசம் வைத்திருந்தமை வியாபாரம் செய்கின்ற ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தொடரப்பட்டன.
குற்றவாளியாகக் காணப்பட்ட இவருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை வழங்கி தனது தீர்ப்பை அறிவித்தார்.





