வவுனியா தமிழ்ச் சங்கம் வெளியிட்ட பேராதனைப் பல்கலைக் கழக மாணவன் சேமமடுவூர் சிவகேசவனின் இரண்டாவது நூலான ‘ஈழக்கவிஞனின் சங்கற்பம்’ எனும் கவிதை நூல் வெளியீடானது 31.01.2016 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் வவுனியா தமிழ்ச் சாங்கத்தின் ஸ்தாபகரும் செயலாளருமான தமிழருவி .த.சிவகுமாரன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொள்ளவிருந்த நிலையில் தவிர்க் முடியாத ஒன்றுகூடலின் நிமித்தம் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. எனினும் அவர்தம் வாழ்த்துச் செய்தி சபையில் பகிரப்பட்டது. அவருக்குப் பதிலாக வடமாகாணசபை உறுப்பினர்.ஜி.ரி.லிங்கநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச செயலாளர்.திரு.கா.உதயராசா அவர்களும், கலாச்சார உத்தியோகத்தர் .திரு.இ.நித்தியானந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமானது. திருமதி.தாட்சாயினி கணேசநாதன் தமிழ்த் தாய் வாழ்த்தினை சிறப்புறப்பாடினார். விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் விழா நாயகன் சேமமடுவூர் சிவகேசவன் இரு கரம்கூப்பி வரவேற்றார்.
வவுனியாநெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய அதிபர் ஆசி உரையினை வழங்கினார். இவர் தனது ஆசிஉரையில் தனது பாடசாலையில் கற்றமாணவன் சேமமடுவூர் சிவகேசவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்பதும் கவிஞனாக இலக்கிய உலகில் பிரவேசிக்க முற்படுவதும் தமக்கெல்லாம் பெருமை என்றதுடன் தனது தலைமையில் சிவகேசவனின் “இந்துக்களின் வாழ்வியல் தத்துவங்கள்” எனும் நூல் 2011 இல்வெளியிடப் பட்டத்தையும் நினைவுகூர்ந்தார்.
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் வழங்கிய வாழ்த்துரையில் வவுனியா தமிழ்ச் சங்கமானது எதிர் காலச் சந்ததி குறித்துஅக்கறை கொள்கிறது. அதன் ஒரு அங்கமாகவே சேமமடுவூர் சிவகேசவனின் நூலை வெளியீடு செய்கிறோம் என்கிறார்.
தொடக்கவுரையை தமிழ்ச் சங்க உறுப்பினர் சிவ.கஜேந்திரகுமார் நிகழ்த்தினார். சிவகேசவனது முயற்சி பாராட்டத்தக்கது என்ற இவர் “சேமமடுவூர் ” என தன ஊர்ப் பெயரையும் தன் தந்தையின் பெயரையும் இணைத்து “கேசவன்” என்ற இளைஞன் “சேமமடுவூர் சிவகேசவன் “என்ற புனைப் பெயரைப் பூண்டு தன் ஊருக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளான் என்றார் .
தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் வழங்கிய தலைமை உரையில், தனது நூலை தமிழ்ச் சங்கமே வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதிற்கிணங்க எமது 51ஆவது வெளியீடாக இந் நூலை வெளியிடுகின்றோம் என்றார். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாதனை படைக்கவேண்டும் என்றதுடன் சிவகேசவனின் கவிதைகள் ஒவ்வொன்றும் தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைகின்றது என்றார்.
பிரதம விருந்தினர் வடமாகாண சபை உறுப்பினர் ஜி .ரி. இலிங்கநாதன் நூலை வெளியிட்டு வைக்க முதற் பிரதியை நூலாசிரியரின் பெரியதாயார் பெற்றுக் கொண்டார்.
தமிழ் மணி கே .கே.அருந்தவராஜா (மேழிக் குமரன் ) நூல் நயவுரை நிகழ்த்தினார். ஈழத்துப் புதுக் கவிதை வரலாற்றைச் சுருக்கமாகக்குறிப்பிட்டார். சிவகேசவனின் கவிதைகளை வள்ளுவரது குறள்களுடனும் பாரதி மற்றும் பாரதிதாசன் முதலியோரின் கவிதைகளோடும்ஒப்பிட்டு சிவகேசவந்து கவிதைகள் கொண்டுள்ள சிறப்பம்சங்களை அழகுற எடுத்தியம்பினார்.
சிவகேசவனின் கவிதைகள் யாவும் தன்னம்பிக்கையை ஊட்டுவதாய் அமைகின்றன என்றார். பல இடங்களில் சிவகேசவனது கவிதைகளில் அன்பின் முக்கியத்துவம் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்படுவதனைச் சுட்டிக் காட்டினார். அதேவேளை பல இடங்களில் சமூக அக்கறை காரணமாக சமூகப் போராளியாகவே சிவகேசவன் மாறி விடுவதனையும் சுட்டிக் காட்டினார்.
அணிப் பிரயோகம் சிறப்புற அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியதுடன் சங்கப் பாடல்களின் சாயலை சிவகேசவனது பாடல்களில் அவதானிக்க முடிகிறது என்றார். பிரதம விருந்தினர் ஜி.ரி.லிங்கநாதன் தனதுரையில் சிவகேசவனது முயற்சியைப் பாராட்டினார்.
சிறப்பு விருந்தினர் வவுனியா மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் சைவப் புலவர் இ.நித்தியானந்தன் தனதுரையில் சேமமடுவூர் சிவகேசவனின் ‘ஈழக் கவிஞனின் சங்கற்பம்’ நூலில் இடம்பெற்ற சில கவி வரிகளை மேற்க்கோள்காட்டி உரையாற்றினார் .
“நாளை நான் இறக்கலாம்
உடல் மண்ணோடு கலக்கலாம்
என்னைப் பலர் மறக்கலாம்
நான் மாண்டாலும் மானிடர்க்கு உதவுவேன் ”
என்ற சிவகேசவனின் கவி வரிகள் தன்னை ஈர்த்தது என்றார். சேமமடு என்னும் பழைய கிராமத்திலிருந்து மேற்கிளம்பும் சிவகேசவனது இலக்கியப் பணி தொடர வேண்டும் எனவும் வாழ்த்தினார் .
நூலாசிரியர் தனது ஏற்புரையில் “கவிதை என்பது ஒரு மொழியைக் கொண்டு வெளிப்படுத்தக் கூடிய இலக்கிய வகைகளில் முதன்மையானஇலக்கிய வடிவம் என்றார் .”கவிதை என்றால் காதல்க் கவிதைதான் என்றும், காதலிப்பவர்கள்தான் கவிதை எழுதுகிறார்கள் என்றும் எமதுசமூகத்தில் புறநடையான சிந்தனை இருக்கிறதென்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.
தனது கவிதைகள் யாவும் எந்தவொரு சமூகத்தையும்இனத்தையும் சாராது உலகப் பொதுத்தளத்தில் யாவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளதென்றார். யார் தமக்கான கவிதைகள் இவை என எண்ணுகிறார்களோ அவர்களுக்குப் பொருந்தும் வகையில் இக் கவிதைகள் உள்ளதென்றதுடன்,தொடர்ந்தும் நாம் யுத்தத்தில் இழந்தவைகளைப்பற்றியே 2009 முதல் இன்றுவரைப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
யுத்தம் தொடர்பான கசப்பான உண்மைகளை பதிவு செய்யும் இலக்கியங்கள் ஆவணப் பதிவுகள். ஆனால் இழந்ததைப் பற்றியே பேசுவதால் நாம் பெற்றது என்ன எனச் சபையிடம் வினாவிய கேசவன், தனது கவிதைகள் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை அரசியல், கல்வி, பொருளாதார ரீதியில் துடிப்புடன் செயற்பட உதவ வேண்டும். அதுவே தனது விருப்பம் என்றார்.
திராவிட மொழிகளில் மூத்த மொழியாகத் தமிழ் கருதப்படுவதற்கு “ழ” என்ற எழுத்தும் காரணமாக அமைகிறது.அந்த “ழ” என்பது “ஈழம் “என்றசொல்லில் இருப்பதுவும் சிறப்பு என்றார் .அதனால்த்தான் ‘ஈழக் கவிஞனின் சங்கற்பம்’ என்று தனது நூலுக்குப் பெயர் சூட்டினேன் என்றார்.
தனது கவிதைகளை யாராவது ஒருவர் படித்துப் பயன் பெற்றாலே அது தனக்குக் கிடைக்கும் வெற்றி எனக் குறிப்பிட்ட சிவகேசவன் தனது விழாவிற்கு உதவியவர்கள், நூல் வெளிவர உதவிய யாவர்க்கும் நன்றி கூறும் முகமாக நன்றி உரை நிகழ்த்தியதுடன் நிகழ்வு சிறப்புற நிறைவுற்றது.






