வவுனியா கூமாங்குளத்தை சொந்த இடமாக கொண்ட கே.நவநீதன் சர்வதேச ரீதியில் 20.02.2016 திகதி அன்று நடைபெறவிருக்கும் 100 கிலோமீற்றர் தூர மரதன் ஓட்டத்திற்கு தெரிவாகி இன்று 18.02.2016 தாய்லாந்து செல்லும் நிலையில் வடமாகாணசபை விளையாட்டுத் துறை அமைச்சு அவரை கண்டுகொள்ளவில்லையென குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த மாதம் (05.02.2016) வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான கூட்டத்தில் மத்திய விளையாட்டத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ரகிஸ் உடன் கலந்து கொண்டிருந்த வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜாவின் கவனத்திற்கு நவநீதன் சர்வதேச ரீதியில் மரதனுக்கு தெரிவாகியுள்ளார் என்பதை கவனத்திற்கு கொண்டுவந்தபொதும் அமைச்சர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சர்வதேச ரீதியில் மரதனுக்கு தெரிவாகியுள்ள கே.நவநீதன் கருத்து தெரிவிக்கையில்..
இலங்கை தேசிய அணியில் இணைந்து 100 கிலோமீற்றர் மரதன் ஓட்டத்தில் தாய்லாந்து பாங்கொங்கில் வருகிற 20.02.2016 திகதி பங்குபற்ற உள்ளதாக குறிப்பிட்ட நவநீதன் வடமாகாணத்தில் விளையாட்டத்துறையை ஊக்குவிப்பதற்கு எந்த அதிகாரிகளும் முன்வருவதில்லையென குற்றஞ்சாட்டினார்.
வடமாகாணத்தில் இளைஞர்கள் சர்வதேச ரீதியில் தெரிவாவதற்கு வடமாகாணசபை முன்வந்து உதவிசெய்யவேண்டும் என குறிப்பிட்டார். கடந்த ஆறு ஏழு வருடங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம் வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கப்படுவதுடன் எந்த உதவிகளும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லையென குற்றஞ்சாட்டினார்.
வவுனியாவைப் பொறுத்தளவில் சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்வதற்கு எந்த வசதிகளும் இல்லையென சுட்டிக்காட்டினார்.
இலங்கை தேசிய அணியில் தெரிவாகி 100 கிலோமீற்றர் மரதன் ஓட்டத்திற்காக தாய்லாந்து செல்லும் நவநீதன் குறித்து சக விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிக்கையில்..
நவநீதன் சர்வதேச ரீதில் தெரிவாகி தாய்லாந்து செல்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. கடந்த ஆறு வருடங்களாக கடுமையான பயிற்சியின் நிமித்தம் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார். வடமாகாணசபை விளையாட்டு அமைச்சு எம்மைப்போன்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவும் பட்சத்தில் எங்களால் கூட சர்வதேச ரீதியில் தெரிவாக முடியும் என சுட்டிக்காட்டினார். விளையாட்டுத்துறை அமைச்சு உதவி செய்யாததன் காரணமாக தனியார்களிடம் தனிப்பட்ட ரீதியில் உதவிகளை பெற்று செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
100 கிலோமிற்றர் மரதனுக்கு கே.நவநீதன் இலங்கை தேசிய அணியில் தெரிவாகி தாய்லாந்து செல்வது குறித்து கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சின் வவுனியா மாவட்ட விளையாட்டுத்துறை இணைப்பாளர் சுந்தரலிங்கம் தனுராஜ்..
வவுனியாவிலிருந்து சர்வதேச ரீதியில் மரதனுக்கு தெரிவாகியுள்ள கே.நவனீதன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் அவர் தான் சர்வதேச ரீதில் தெரிவாகிய விளையாட்டத்துறை அமைச்சின் கடிதத்தை வவுனியா வர்த்தக நிலையங்களில் காட்டி தனது பயணத்திற்கு பணம் சேகரித்துக்கொண்டிருந்ததை அறிந்தவுடன் அதனை தடுத்து நிறுத்தி எனது நண்பர்களிடமும் மற்றும் தாறாள உள்ளம் படைத்தவர்களின் உதவியுடனும் பணம் சேர்க்கப்பட்டது
நவனீதனுக்கு உதவி தேவையென கடந்தமாதம் (05.02.2016) வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான சந்திப்பில் வடமாகாணசபை விளையாட்டு அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தபோதும் அது குறித்து அமைச்சரோ, விளையாட்டுத்துறை செயலாளரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.






