யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக கல்விசாரா ஊழியர்கள் இன்று(18.02.2016) வவுனியா பூங்கா வீதியில் உள்ள வளாகத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழுவானது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபத்திற்கு சமமான மாதாந்த இழப்பீட்டுப்படி அதிகரிக்கப்படவேண்டும். மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் அத்தோடு ஓய்வூதியம் என்பவும் அந்த கணிப்பீடடுக்குள் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாமல், அனைத்து பல்கலைக்கழகத்தின் ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டமானது, அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவும் இணைந்த சீரான முறையில் வழங்கப்படவேண்டும் என்றும் வேண்டப்பட்டுள்ளது.
இதுதவிர இன்னும் இதர சில சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25ஆம் திகதி கடிதம் மூலம் தெரிவித்தும் எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதாலேயே, குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மதியம் 12 மணியில் இருந்து 1 மணிவரை இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கல்விசாரா ஊழியர்கள் சகலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






