வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது..!

368

thavachsriவன்னியைச் சேர்ந்த தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் கிராமப் புற சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பணியாற்றியமைக்காக “2013-என் சமாதான” (N Peace Award) விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில், இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில், “என் சமாதான விருதை” இவருடன் மேலும் 5 பேர் பெற்றுக் கொள்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர், இந்தானேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இந்த ஆண்டுக்கான சமாதான விருதைப் பெறுகின்றனர்.

தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம், வன்னியில் பல்வேறு பெண்கள் சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். சமூகமட்ட பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் செயலராகவும், கரைச்சி பிரதேச செயலர் மட்டத்திலான பெண்கள் வலையமைப்பான பெண்கள் அபிவிருத்தி சம்மேளனத்தின் பொருளாளராகவும் பணியாற்றுகிறார்.

இவர், ஆதரவற்ற பின்தங்கிய சிறுவர்கள் கல்வியைப் பெறுவதற்கும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழுந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல், பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள், காணி உறுதிகள் போன்ற அவசியமான சட்ட ஆவணங்களைப் பெறுக்கொடுப்பது உள்ளிட்ட சமூகப் பணிகளை இவர் ஆற்றியுள்ளார்.

பெண்களின் உரிமைக்காகவும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், கடன்கள், உதவிகள், தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இவர் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தவச்சிறி விஜயரட்ணம்,

“எனது சமூகத்தின் தேவைகளுக்காக பல ஆண்டுகளாக அமைதியாக சேவையாற்றி வருகிறேன். இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.  இது எனது சேவையை தொடர்வதற்கு மேலும் உந்துதல் அளிப்பதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தவிருது வழங்கும் நிகழ்வு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளது.