சீனிவாசனுக்கு கடும் எதிர்ப்பு : ஒத்திவைக்கப்பட்டது பிசிசிஐ செயற்குழு கூட்டம்!!

341

srinivasan

சீனிவாசன் தலைமை வகிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டது. குருநாத் தமது மருமகன் என்பதால் பி.சி.சி.ஐ., தலைவர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் தற்காலிகமாக ஒதுங்கினார்.

இது தொடர்பாக பிசிசிஐயால் அமைக்கப்பட்ட இருநபர் குழு, சட்ட விரோதமானது, சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியைக் காட்டியது.

இதைத் தொடர்ந்து இன்று சீனிவாசன் தலைமையில் பிசிசிஐ செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இதில் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் செயற்குழுக் கூட்டத்துக்கு சீனிவாசன் தலைமை வகிக்கக் கூடாது என்று பீகார் கிரிக்கெட் சங்க செயலர் வர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் செயற்குழுக் கூட்டத்துக்கு உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

அதில் பலரும் சீனிவாசன் கூட்டத்துக்கு தலைமை வகிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சீனிவாசனோ தாம் கூட்டத்துக்கு தலைமை வகிப்பேன் என்று அடம்பிடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.