நல்லிணக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டு மகா சிவராத்திரி!!

249

Maithiri

மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள இலட்சக் கணக்கான இந்து பக்தர்கள் தங்களிடம் ஆன்மீக நல்லொழுக்கப் பெறுமானங்களை வளர்த்துக் கொள்ளவும் லௌகீக வாழ்க்கையை மிகச் சிறப்பான முறையில் அமைத்துக்கொள்ளவும் அனுஷ்டிக்கின்ற மகா சிவராத்திரி தினத்தின் ஊடாக வெளிப்படுவது நன்மைகளின் மீதான மனிதனது உயர்ந்த ஈடுபாடும் பிணைப்புமாகும்.

இந்நன்னாளில் இந்து பக்தர்கள் அமைதியையும் மன ஆறுதலையும் எதிர்பார்ப்பதோடு, அவர்களது சகல ஆசாபாசங்கள் மற்றும் சமய அனுஷ்டானங்களின் போதும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவருக்காக நல்லிணக்கமான வாழ்வுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். நீண்ட நெடுங்காலமாக மனித உள்ளங்களில் கருக்கொண்டு தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் இத்தகைய பாரம்பரியங்கள் எப்போதும் மனிதனது அமைதியான சமாதானமான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளன.

கடவுளும் மனிதனும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இத்தகைய சமய அனுஷ்டானங்கள் மூலம் சமூகத்திற்குக் கிடைக்கும் நற்செய்தி முழு மனித சமூகத்தினதும் மதிப்பிற்கும் அங்கீகாரத்திற்கும் பாத்திரமாய் அமைகின்றன.

மகா சிவராத்திரி தினத்தை அதன் உண்மையான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கும் சகல இந்து பக்தர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என அவ்வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.