கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்..!

341

examகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை 05ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிறன.

பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரீட்சைகள் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 க்கு இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும்.

நாளை ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைகளில் பழைய, புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92, 706 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35, 318 பாடசாலை பரீட்சார்த்திகளும், 45,242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். பழைய பாடத்திட்டத்தின் படி 12,146 தனிப்பட்ட பரீட்சார்த்திகளே தோற்றவுள்ளனர்.

நாடு முழுவதும் 2164 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. விசேட தேவையுடையவர்களுக்கென ரத்மலானையிலும், தங்காலையிலும் பரீட்சைகள் நடத்தப்படும்.

பரீட்சை கடமைகளில் 16,264 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உயர்தர பரீட்சைக்குரிய 5 பாடங்களுக்குமாக தமிழ், சிங்கள மொழிகளில் மொத்தம் 40 லட்சம் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறுவதாக அறிவித்துள்ள பகுதிகளில் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஒலிபெருக்கி பாவனை என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டபத்துள் பரீட்சை மேற்பார்வையாளர்கள் கூட மாணவர்களுக்கு, பரீட்சார்த்திகளுக்கு இடையூறு அல்லது அவர்களது கவனம் சிதைந்து விடும் விதத்தில் ஒலி கேட்கும் விதத்தில் பாதணிகள் அணிவதும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சை நடைபெறும் நாட்களில் பாடசாலை வளவுக்குள் பரீட்சையுடன் தொடர்புடையவர்களைத் தவிர வெளியார் எவரும் உள்ளே செல்லக் கூடாது.

இம்முறை பொலிஸாரின் கூடுதல் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

*அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மண்டபம் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்துக்கு பரீட்சார்த்திகள் வரவேண்டும்.

*அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட் டுள்ள பாடங்கள் சரியானவையா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தான் விண்ணப்பித்த பாடம் சரியாக இல்லாத பட்சத்தில் பரீட்சை திணைக்களத்துடன் தொடர்புகொண்டு சரி செய்துகொள்ள வேண்டும்.

*பரீட்சைக்கான அனுமதி அட்டையில் பரீட்சார்த்தி தனது கையொப்பத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். பாடசாலை விண்ணப்பதாரியாயின் பாடசாலை அதிபரூடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்தியாயின் அதற்குரிய நபரூடாகவும் உறுதி செய்துகொள்ள வேண்டும். (அனுமதி அட்டையின் மறுபுறம் குறிப்பிடப்பட்டுள்ளது)

*பரீட்சைக்கு செல்லும்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். இவை இல்லாத விடத்து பரீட்சை மண்டப பொறுப்பாளரிடம் வினவ முடியும்.

*பரீட்சார்த்திகள் விடைத்தாள்களை ஒப்படைத்த பின்னர் பரீட்சை மண்டப பொறுப்பாளர் விடைத்தாள்களை சரிபார்த்து முடியும் வரை பரீட்சார்த்திகள் மண்டபத்தைவிட்டு வெளியேறக் கூடாது.

*பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் கருவிகளை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

*அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மண்டபம், பாடங்கள் தொடர்பாக பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இவை சரியானவையா? என்பது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் தனியார் மற்றும் இ. போ. சபை பஸ் போக்குவரத்துகள் ஒழுங்கான முறையில் நடைபெறவேண்டும் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

பரீட்சை நடைபெறும் காலங்களில் பரீட்சை மண்டபத்தினுள் அல்லது பரீட்சை நடைபெறும் வளவுக்குள் வெளியார் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பரீட்சைகள் நடைபெறும் பகுதியில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ஒலிபெருக்கிகள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் பரீட்சை நடைபெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.