வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் உணவூட்டல் தினம்!!

535

 
கிராமப்புறத்திலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பாடசாலையில் உலக உணவுத்திட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் உணவை உண்பதன் ஊடாக தமது பசியைப்போக்கி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மையை நான் அறிந்துள்ளேன் என்று வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டபணிப்பாளரும் உலக உணவுதிட்ட கண்காணிப்பாளருமான திருமதி கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரக்கோட்டதினால் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் தினம் சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜாவித்தியாலயத்தில் அதிபர் வரதராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டபோது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

இன்று சில பாடசாலைகளில் உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்படும் உணவை சரியாக பயன்படுத்துவதில்லை. அதற்காக நாம் வருத்தப்படுகின்றோம். இன்று பிள்ளைகள் பாடசாலைக்கு வரும்போது வீட்டில் சாப்பிடும் உணவைவிட பாடசாலையில் வழங்கப்படும் உணவை விரும்பி உண்கிறார்கள். வீட்டில் எல்லோருக்கும் போசாக்கான உணவு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. இன்று வடமாகாணத்தின் பொருளாதாரம் அப்படியான வறுமையில் உள்ளது.

போருக்குப் பின்பும் அதன் தாக்கம் உள்ளது. அரச உத்தியோகக்காரர் காலைவேளை பிள்ளைக்கு தேவையான சத்துணவை வழங்குதில் அவர்களுக்கு நேரம் இல்லை. வேலைக்கு போகும் அவதியில் பாணை பணிசை வேண்டிகொடுக்கிறார்கள். இது எந்தளவு தூரம் ஆரோக்கியமான உணவாகும். பிள்ளையொன்று பாடசாலையில் 75 கிராம் அரிசி 20 கிராம் பருப்பு 15 மில்லிலீற்றர் எண்ணெய் 15 கிராம் மீன்ரின் என்பன சமைக்கப்படுகிறது.

இதனால் பிள்ளையின் உடல் மட்டுமல்ல அறிவும் விருத்தியடைகின்றது. கட்டிடங்கள் கட்டுவதோ அல்லது வீதியை போட்டபின்போ நாம் வெளிப்படையாக அதன் தரத்தை மதிப்பிடுவது வெளிப்படையானதும் இலகுவானதுமாகும். ஆனால் பாடசாலை மாணவணுக்கு ஊட்டச்சத்து உரியவாறு கிடைக்கின்றதா என்பதை அறிவது கடினமானது.

ஒரு பாடசாலையின் கல்வி பெறுபேற்றில் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் உணவு செல்வாக்குச் செலுத்துகின்றது. சிறிநாகராஜா வித்தியாலயத்தில் ஒரு மாணவனைத் தவிர ஏனைய மாணவர்கள் கா.பொ.த சாதாரன பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை இந்த உணவை மாணவர்கள் உண்பதன் ஊடான வெளியீடு என்பதை அறிய முடிகிறது.

கிராமப்புற பாடசாலைகளின் கல்வியில் உணவூட்டலின் தாக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது. பெற்றோர்கள் பாடசாலையில் வந்து இந்த உணவை சமைத்து கொடுக்க முன்வரவேண்டும். கட்டிடங்கள் கட்டுவது வீதியை போடுவதை விட பிள்ளைக்கு சாப்பாடு போடுவது சிறந்ததொரு சேவை. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் மட்டும் இந்தப் பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல் வழங்கப்படுகிறது. எமது பிரதேசத்தில் இந்தச் சேவையை செய்யும் உலக உணவுத்திட்டத்தினரை பாராட்டுகின்றேன்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் திருமதி சிவகுமாரி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் இளையதம்பி, வவுனியா நகரக்கோட்ட உலக உணவுத்திட்ட இணைப்பதிகாரி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் வரதகுமார், வவுனியா தெற்கு கல்விவலய ஆசிரிய ஆலோசகர் பத்மநாதன், வவுனியா தெற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன் சந்திரன், சிறி நாகராஜா வித்தியாலயத்தின் உலக உணவுத்திட்ட செயற்றிட்ட பொறுப்பாசிரியர் பிரகாஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்

இத்தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்று பெற்றோர் பங்களிப்புடன் போசாக்கான உணவு வழங்கப்பட்டது.

20160303_094459 20160303_094826 20160303_094832 20160303_100000 20160303_101541 20160303_103713