பர்வேஸ் ரசூல் புறக்கணிப்பு குறித்து கோலி விளக்கம்!!

300

rasool

பந்துவீச்சு தொடர்பாக அணி வகுத்த திட்டத்தின்படி ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று அணித்தலைவர் வீராட் கோலி தெரிவித்தார்.

சிம்பாவே சென்ற இளம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்று முழுமையாக வென்றது. இத்தொடரில் காஷ்மீரைச் சேர்ந்த சகலதுறை வீரர் பர்வேஸ் ரசூலுக்கு ஒரு போட்டியில்கூட விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதற்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையில் தனது முடிவை நியாயப்படுத்திய இந்திய அணித்தலைவர் கோலி கூறுகையில், வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது தொடர்பாக வெளியான கருத்துகள் பற்றி எனக்கு கவலை இல்லை.

ஏனென்றால் 5 போட்டிகளில் நிறைய பேர் வாய்ப்பு கிடைக்காமல் அமர்ந்திருந்தனர். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதில் ரசூலை சேர்த்திருக்கலாம் என்கின்றனர். என்னை பொறுத்தவரை ஜடேஜா போன்றவரை நீக்குவது மிகவும் கடினமான விடயம்.

பந்துவீச்சில் அசத்தும் இவரால் எந்த கட்டத்திலும் விக்கெட் வீழ்த்த முடியும். தவிர எந்த ஒரு போட்டியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பந்துவீச்சில் அதிக மாற்றங்களை செய்ய விரும்பாததால் தான் ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை. இது துரதிஷ்டவசமானது.

அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய ஏ அணியில் இவர் இடம்பெற்றுள்ளார் என்றும் இத்தொடரில் நிறைய போட்டிகளில் பங்கேற்று போதிய அனுபவம் பெறுவார் எனவும் கூறினார்.

இது குறித்து ரசூலுக்கு பயிற்சி அளித்த முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில் அணித்தெரிவில் அரசியல்வாதிகள் ஏன் நுழைகின்றனர் என்று தெரியவில்லை. இவர்களது தயவு இல்லாமலே ரசூல் சாதிக்கலாம்.

தனது திறமையால் தான் இந்திய அணிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்றும் இதே போல விரைவில் விளையாடும் அணியில் வாய்ப்பு பெறுவார் எனவும் கூறினார்.