லிபியாவில் சிறையில் கலவரம் – 1000 கைதிகள் தப்பி ஓட்டம்..!

357


vavuniyaஅரபு நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. அப்போது அவர் கொல்லப்பட்டார். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது.

இந்த நிலையில், பெங்காசியில் அரசியல் கட்சி தலைவர் அப்துல் சலாம் அல்–மிஸ்மரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.



அதை தொடர்ந்து தலைநகர் திரிபோலியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முஸ்லீம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பின்னர் அது கலவரமாக பெங்காசி நகருக்குள் பரவியது. முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினருக்கும், தேசிய கூட்டணி கட்சியினருக்கும் இடையே மோதலாக மாறியது.



இதற்கிடையே இக்கலவரம் பெங்காசி அருகேயுள்ள அல்–குயாபியாவில் உள்ள மத்திய சிறையிலும் பரவியது. இந்த சிறையில் அரசியல் கைதிகளும், புரட்சியின் போது கொல்லப்பட்ட அதிபர் மும்மர் கடாபியின் ஆதரவாளர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.



அவர்களில் கடாபியின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுமார் 1000 கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.


அதை தொடர்ந்து சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பி ஓடியவர்களில் பலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பிரதமர் அலி ஷெய்டன் தெரிவித்துள்ளார். இந்த சிறை மத்திய குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. எனவே தப்பியோடி கைதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.