வொஷிங்டனை குறிவைத்து அணு ஆயுத தாக்குதல் : வடகொரியா வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ!!

668

Blast

உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

இதனால், உலகநாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் கடந்த ஏழாம் திகதியில் இருந்து தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்ட அறிக்கையில், எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன. அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். போர் மூண்டால் தென்கொரியா தலைநகர் சியோல் உட்பட அந்த நாடு முழுவதையும் எரித்து சாம்பலாக்குவோம். வடகொரிய ராணுவமும் தற்காப்புக்காக தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தங்கள் நாட்டின் அணு ஆயுத தாக்குதல் இலக்கின்கீழ் வாஷிங்டன் இருப்பதாக கூறி ‘கடைசி வாய்ப்பு’ என்ற பிரச்சார வீடியோ ஒன்றை வட கொரியா வெளியிட்டு உள்ளது. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அமெரிக்க- கொரியா உறவுகளின் வரலாறு காண்பிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் நம்மை நோக்கி ஒரு அங்குலம் நகர்ந்தாலும் உடனடியாக அவர்களை அணுஆயுதம்மூலம் தாக்குவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.