அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி அவுஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.
ஏற்கனவே நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன் தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் தொடர்புகள் இல்லை என மட்டக்களப்பபு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் கூறினார்.
தனது சகோதரர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இரு சகோதரர்களினதும் புகலிட கோரிக்கை மனு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்ட நிலையில் அது தொடர்பான முடிவை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தங்களை நவுறு தீவிலுள்ள வேறு முகாமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அங்கு தொலைபேசி வசதிகள் இருந்தால்தான தொடர்பு கொள்ள முடியும் என்றும் சகோதரர்கள் தெரிவித்திருந்ததாக அப்பெண் குறிப்பிட்டார்.
ஆனால் இதுவரை தொடர்பு இல்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.
53 வயதான தாயொருவர் , தனது மகன் நவுறுதீவில் சென்ற ஒகஸ்ட் மாதம் தொடக்கம் தினமும் இரு தடவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்றும் ஆனால் இப்போது தொடர்புகள் இல்லாத இல்லை என்றும் கூறுகிறார். இதனால் உளரீதியாக தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
(BBC)





