பறக்கும் விமானத்தில் யோகா செய்ய மிரட்டிய பயணி : விமானத்தை அவசரமாக திருப்பிய விமானிகள்!!

265

Yoga

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இருக்கையில் அமராமல் விமானத்திலேயே ‘யோகா’ செய்ய வேண்டும் என அனைவரையும் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹவாய் மாகாணத்தில் உள்ள Honolulu என்ற நகரிலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் என்ற விமானம் பயணிகளுடன் ஜப்பானுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தென் கொரியா நாட்டை சேர்ந்த Hyongtae Pae(72) என்பவரும் அவருடைய மணைவியும் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென அந்த நபர் இருக்கையை விட்டு எழுந்து விமானத்தின் பின்புறம் செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி அவரை தடுத்து நிறுத்தி இருக்கையில் அமருமாரு கெஞ்சியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பயணி மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். விமானக்குழுவினர் அவரை தடுத்து நிறுத்தி இருக்கையில் அமர கூறியுள்ளனர்.

ஆனால், ‘எனக்கு இப்போது ‘யோகா’ செய்ய வேண்டும். என்னால் இருக்கையில் அமர முடியாது. என்னை தடுத்தால் அனைவரையும் கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
நிலைமையை உணர்ந்த விமானிகள் அவசரமாக விமானத்தை திருப்பிக்கொண்டு புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று ஹவாய் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது பயணியின் வழக்கறிஞர் பேசியபோது, ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் 40வது திருமண ஆண்டை கொண்டாடுவதற்காக ஹவாய் வந்துள்ளனர்.

அதேசமயம், அவர் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து விடுபடவே விமானத்தில் யோகா செய்ய முயற்சித்துள்ளார்’ என வாதாடியுள்ளார்.

எனினும், பிற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவிற்கு நடந்துக்கொண்டது குற்றம். ஆகவே, பயணிக்கு 25,000 டொலர் ரொக்கப்பிணையில் விடுதலை செய்வதாகவும், அனுமதி இல்லாமல் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.