வீதியில் சுற்றித் திரிந்த பூனைக்கு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தில் வேலை!!

257

Cat

லண்டன் வயிட்ஹாலில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகம் அமைந்திருக்கும் கட்டடத்தில் எலித் தொல்லை அதிகமாகிவிட்டதால் பூனை ஒன்று வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது.

பிரிட்டனின் முக்கிய அமைச்சரும், ராஜதந்திரிகளும் பணியாற்றும் அந்தக் கட்டடத்தில் பாமெஸ்டோன் என்ற அந்தப் பூனையும் இனிப் பணியில் இருக்கும். ஆனால், இந்தப் பூனைக்கு மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்படாது என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தப் பூனை லண்டன் வீதிகளில் திரிந்துகொண்டிருந்தது. சாப்பிட உணவின்றி, குறைந்த எடையுடன் திரிந்த இந்தப் பூனையில் மைக்ரோ சிப்பும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அதனால், இந்தப் பூனை யாருடையது என்பதும் தெரியவில்லை.

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான பாமெஸ்டோன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 71வது வயதில் பிரதமரான பாமெஸ்டோன், பிரிட்டனின் மிகவும் வயதான பிரதமர்களில் ஒருவர் என்றாலும் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தவர்.

பிரதமராவதற்கு முன்பாக 15 ஆண்டுகள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். பிரிட்டனின் அரசு அலுவலகங்கள் பலவற்றில் இம்மாதிரி பூனைகள் வளர்க்கப்படுகின்றன.

பிரதமரின் இல்லமான 10, டவுனிங் ஸ்ட்ரீட்டிலும் லாரீ என்ற பூனை வளர்க்கப்படுகிறது. இந்தப் பூனைக்கென அதிகாரபூர்வமற்ற முறையில் ஒரு ட்விட்டர் கணக்கும் இருக்கிறது. அந்தக் கணக்கை 47,500 பேர் பின்தொடர்கிறார்கள்.

நிதியமைச்சர் ஜோர்ஜ் ஆஸ்பர்ன் வீட்டிலும் ஃப்ரேயா என்ற ஒரு பூனை வளர்க்கப்படுகிறது. ஆனால், அந்தப் பூனை மிகவும் துடுக்குத்தனம் மிக்கது. ஒரு முறை வீட்டைவிட்டு ஒரு மைல்தூரம் சென்றுவிட்டது.
மற்றொரு முறை ஒரு காரின் குறுக்கே சென்று அடிபட்டுவிட்டது. ஆனாலும் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை.