இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா..!

534

indSLஇலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீன்பிடிக்கிறார்கள் என்று தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது என்று பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிப்பதால், தமது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இந்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் அழுத்தங்கள் அரசின் மீது அதிகரித்தாலேயே அவர்களை சிறைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.

எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்தார்.

இந்தியாவின் கவலைகள் கொழும்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை விரைவுபடுத்தி, விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் தான் இந்திய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் பிரசாத் காரியவசம் கூறுகிறார்.

(BBC)