ஆஷஸ் தொடரில் துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டி நூதன மோசடி?

323

selicon

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது “சிலிகன் டேப்” ஒட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசடி செய்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட கௌரவம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடந்து வருகிறது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் சமநிலையில் நிறைவடைந்தது.

தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து அணி ஆஷஸ் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் ஆஷஸ் தொடர் மீது புதுவிதமான பிரச்சினை வெடித்துள்ளது. இந்த தொடரில் நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால், அதை எதிர்த்து முறையீடு செய்யும் முறை (டி.ஆர்.எஸ்.) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த தொழில்நுட்பம் ஒட்டுமொத்த சர்ச்சையின் உருவமாக கிளம்பி இருக்கிறது. டி.ஆர்.எஸ். என்பது நடுவர்களின் தவறான தீர்ப்புகளை சரி செய்வதற்கு தான். ஆனால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், சில தவறான தீர்ப்புகள் ஆஷஸ் தொடரில் வழங்கப்பட்டது.

குறிப்பாக டி.ஆர்.எஸ் இன் ஒரு அங்கமான “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் குறித்து பல்வேறு ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பந்து துடுப்பில் உரசியதா இல்லையா என்பதை துல்லியமான “இன்ப்ரா ரெட் கமரா” உதவியுடன் அறிவதற்கு “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் ஆஷஸ் 3வது டெஸ்டின் போது ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் மேத் பிரையரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததாக நடுவர் தீர்ப்பு வழங்கிய போது “ஹொட் ஸ்பொட்” முறையின்படி டி.வி. ரீப்ளேயில் பார்த்தனர்.

பந்து துடுப்பில் உரசியதற்கான ஆதாரம் எதுவும் தெரியவில்லை. ஆனால் பந்து துடுப்பை கடந்த போது ஏதோ சத்தம் மட்டும் வந்தது. பந்து துடுப்பில் உரசியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவரது ஆட்டமிழப்பு உறுதி செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதே போட்டியில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு வழங்கப்பட்ட பிடியிலும் “ஹொட் ஸ்பொட்” முறையில் பந்து துடுப்பில் பட்டதற்கான அடையாளம் தெரியவில்லை. இதனால் “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பத்தில் கோளாறு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறினார்.

இதற்கிடையே “ஹொட் ஸ்பொட்” தொழில் நுட்பத்தை குழப்புவதற்காக இந்த தொடரில் இரு அணியிலும் சில வீரர்கள் நூதன மோசடியை கையாண்டு இருப்பதாக இப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது துடுப்பில் பந்து உரசி செல்வதை தவிர்ப்பதற்காக வீரர்கள் சிலிகன் என்ற ஒரு வகை உலோக டேப்பை துடுப்பில் ஒட்டி பயன்படுத்தி வந்துள்ளனர். சிலிகன் டேப்பில் பந்து உரசும் போது அது துடுப்பில் பட்டதற்கான அடையாளத்தை மறைத்து விடும். சத்தமும் வராது. இவ்வாறு நடக்கும் போது “ஹொட் ஸ்பொட்” தொழில் நுட்பம் குழம்பி போய் விடும்.

இப்படி மோசடிகள் அரங்கேற்றப்பட்டதால் தான், இந்த தொடரின் போது “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பம் சில முக்கியமான முடிவுகளில் தனது தரத்தை இழந்து விட்டதாக ஆஸி. தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அந்த அலைவரிசை குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி இங்கிலாந்து முன்னாள் தலைவர் மைக்கேல் வோகன் கூறும் போது, வீரர்கள் தங்களின் துடுப்புகளில் சிலிகன் டேப்பை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆஸி. தலைவர் மைக்கேல் கிளார்க் விசாரிக்க வேண்டிய நேரம் இது என்றார்.

மைக்கேல் கிளார்க்கிடம் இது பற்றி கேட்ட போது துடுப்பில் டேப் பயன்படுத்துவது குறித்து எனக்கு தெரியாது. எங்கள் அணியில் யாரும் இது போன்ற மோசடியில் ஈடுபடவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்த மாதிரி விளையாடுவது ஆஸி. கிரிக்கெட்டின் கலாசாரம் கிடையாது என்றார்.

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் மீதுதான் மறைமுகமாக இந்த புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்துள்ள அவர் கூறும்போது, விக்கெட்டை இழப்பதற்கு நான் ஒரு போதும் பயந்தது கிடையாது. ஆட்டமிழப்பு என்றால் உடனே நடையை கட்டி விடுவேன். துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டியிருப்பதாக கூறுவது, எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

பந்து துடுப்பில் உரசுவதை மறைக்க நான் முயற்சிப்பதாக கூறுவது முட்டாள்தனமானது. முதல் இன்னிங்சின் போது எனது துடுப்பில் பந்து உரசியதை “ஹொட் ஸ்பொட்” தொழில்நுட்பத்தில் தெளிவாக தெரிந்ததை எண்ணி பார்க்க வேண்டும்’ என்றார்.

எனினும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் குற்றச்சாட்டை ஐ.சி.சி. மறுத்துள்ளது.

ஐ.சி.சி பொது மேலாளர் ஜெப் அலார்டைசி ஆஸி. இங்கிலாந்து வீரர்கள், நடுவர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் டி.ஆர்.எஸ். முறையை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்தார். மற்றபடி எந்த வீரர்களிடம் விசாரணை நடத்தவில்லை. ஊடகத்தின் தகவல் தவறானது என்று ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சட்சன் கூறியுள்ளார்.