அடிக்கடி தீப்பிடித்து எரியும் குழந்தை ..பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை!!

534

fire_baby

தமிழ்நாடு திண்டிவனம் அருகே பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் குழந்தையின் பெற்றோர்களை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கியுள்ளனர் கிராமத்தினர்.

குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டி.பரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன்(வயது 26). இவர் கடந்த 2010ம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள சிமெண்டு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்த போது அங்கு வேலை பார்த்த மயிலம் அருகே நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி(23) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கர்ணனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் 2 பேரும் டி.பரங்கிணியில் வசித்து வந்தனர். ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்த உடன் அவர்களது திருமணத்தை ராஜேஸ்வரியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.

அழகான ஆண்குழந்தை இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமுற்ற ராஜேஸ்வரி பிரசவத்துக்காக நெடிமோழியனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகுல் என பெயர் வைத்தனர்.

தீயில் எரிந்த குழந்தை குழந்தை பிறந்த 8வது நாளில் நடுவீட்டில் குழந்தை ராகுல் தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் உடலை ராஜேஸ்வரி துணி போட்டு மூடியிருந்தார். சிறிதுநேரத்தில் அந்த துணி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அந்த துணியை அகற்றிவிட்டு கைக்குழந்தையுடன் வெளியே ஓடிவந்தார்.

சிறிது நேரத்தில் அந்த குழந்தை படுத்திருந்த குடிசை வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி தீ விபத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நெடிமோழியனூர் கிராமத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது.

இதில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதற்கான காரணம் தெரியாமல் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதையொட்டிதொடர்ந்து 2 மாதங்கள் தீயணைப்பு படையினர் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அதன்பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அத்தகைய தீ விபத்து சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நெடிமோழியனூரில் ராஜேஸ்வரியின் கைக்குழந்தையின் உடல் திடீரென தீப்பற்றி எரிந்து காயமேற்பட்டது. இதனையடுத்து 15 நாட்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு குணமடைந்தவுடன் ராஜேஸ்வரி தனது குழந்தையை கணவர் ஊரான டி.பரங்கிணி கிராமத்திற்கு கொண்டு சென்றார்.

அன்று மாலை 4 மணிக்கு அந்த குழந்தை அணிந்திருந்த சட்டை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனை தொடர்ந்து அந்த குழந்தையின் தலையும் தீப்பிடித்து எரிந்தது. இது பில்லி சூனியத்தின் வேலையாக இருக்குமோ என கருதி ராஜேஸ்வரி தனது கைக்குழந்தையை புதுச்சேரியில் உள்ள இந்து கோவில்கள், மசூதி, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கொண்டு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

பின்னர் அபிஷேகபாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த சில மணி நேரத்தில் மீண்டும் அந்த குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த குழந்தையை வீட்டை விட்டு வெளியே எடுத்து வந்தவுடன், வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் டி.பரங்கிணியில் உள்ள மாமியார் துளசி வீட்டிற்கு ராஜேஸ்வரி கைக்குழந்தையுடன் சென்றார். அங்கேயும் குழந்தையின் உடலில் திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் பக்கத்து வீடுகளிலும் தீப்பற்றியது.

எனவே அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த குழந்தையை இங்கேயே வைத்திருந்தால் நெடிமோழியனூரில் வீடுகள் தீப்பிடித்து எரிந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதை போல, டி.பரங்கிணியிலும் வீடுகள் தீப்பிடித்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் எனவே குழந்தையை வேறு எங்காவது கொண்டு சென்றுவிடுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உடனே அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் கைக்குழந்தையான ராகுலும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். மருத்துவ பரிசோதனை குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். குழந்தையின் உடல் எரிவதற்கு என்ன காரணம் என கண்டறியாமல், குழந்தையையும், அதன் தாயையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

2மாத கைக்குழந்தையின் உடலில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியவதற்கான காரணம் என்ன அந்த கைக்குழந்தையை எந்த ஊருக்கு கொண்டு சென்றாலும் தீப்பிடித்து எரிவதற்கான காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது.