தலைவா படத்துக்கு தடங்கலா : கருணாநிதி கருத்து!!

391

karunanithiகேள்வி :– நடிகர் விஜய் நடித்து 9ம் திகதி வெளிவருவதாக இருந்த தலைவா திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வருகிறதே?

பதில் :– தலைவா திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும் யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் முதல்– அமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடை நாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும் ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. மேலும் தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும். வரி விலக்கு கூட இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் இந்த நிலைதான் வந்தது. தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் தொடருமேயானால் அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால் ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.

கேள்வி :– அ.தி.மு.க. அரசு தாமதமாக ஓகஸ்ட் 2ம் திகதி பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்த போதிலும் விவசாயிகள் அந்தத் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாதவாறு கால்வாய்கள் எல்லாம் தூர் வாரப்படாமல், புதர் மண்டிக் கிடப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளனவே?

பதில்:– டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் எல்லாம் எவ்வாறு தூர் வாரப்படாமல் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன என்பதைப் புகைப்படங்களோடு நாளேடுகள் எடுத்து வெளியிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் அவை தொடர்ந்து காட்டப்படுகின்றன.
கொள்ளிடம் ஆற்றிலே வருகின்ற தண்ணீர் அரசின் முன்னெச்சரிக்கை இல்லாத காரணத்தால், கடலில் சென்று கலப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

பாசனத்துக்கு உரிய நீர் தலைமடை முதல் கடைமடை வரை தங்குதடையின்றி, பயிர்களுக்குச் சென்றடையாத வகையில் ஏரி, குளம், வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு செடிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாம்.

கேள்வி :– ஓய்வூதிய தாரர்கள் இறக்கும்பொழுது அவர்களது வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பப் பாதுகாப்பு நிதியை 50 ஆயிரம் ரூபாயாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயர்த்தி யிருப்பதாக ஏடுகளில் செய்தி வெளிவந்திருக்கிறதே?

பதில்:– அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்பு நிதியே தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் என்னால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் என்பதை அரசு அலுவலர்கள் மறந்து விடுவார்களா என்ன? அதுபோலவே காலஞ்சென்ற ஓய்வூதியர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்கென 1-1-1997 முதல் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, ஓய்வூதியர்களிடமிருந்து அவர்கள் இறக்கும் காலம் வரை அவர்தம் ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு 20 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து, ஓய்வூதியரின் மரணத்திற்குப் பின் அவரின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற திட்டமும், தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டம்தான்.

இந்த உதவித்தொகையைத் தான் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1-6-2012 முதல் 35 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறார். ஆனால் இந்தத் திட்டத்திற்காக மாதந்தோறும் ஓய்வூதியர்களிடமிருந்து ஏதாவது பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதைப் பற்றியும், அது விருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டமா என்பதைப் பற்றியும் தற்போதைய அரசு அறிக்கையிலே கூறவில்லை.

அது மாத்திரமல்ல இந்தத் தொகை கூட அரசே தன் நிதியிலேயிருந்து அரசு ஓய்வூதியதாரர்களுக்குச் செய்வதும் அல்ல. 35 ஆயிரம் ரூபாய் என்பதை 50 ஆயிரம் ரூபாயாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயர்த்திக் கொடுக்கிறார் என்றால் உயர்த்தப்படும் இந்தத் தொகை கூட அரசினால் வழங்கப்படுவதல்ல.

பணியிலே இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதந்தோறும் 70 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, அந்தத் தொகையிலிருந்துதான், அந்த ஓய்வூதியதாரர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்திற்கு இதுவரை 35 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்தார்கள்.
அதை தற்போது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்துகின்ற போது, ஓய்வூதியதாரர்கள் இதுவரை மாதந்தோறும் இதற்காகச் செலுத்தி வந்த 70 ரூபாய் என்பதை 80 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யவிருக்கிறார்கள்.

இதையும் முதல் அமைச்சர் அறிவிப்பில் அப்படியே மறைத்து விட்டு, அரசு ஏதோ ஓய்வூதியதாரர்களுக்கு புதிதாகத் தருவதைப்போல, அதுவும் தற்போதுதான் தருவதைப் போலச் செய்தி கொடுத்து விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.