இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியா வழங்கிய இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 114 தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரி, கடந்த வாரத்தில் இந்தியாவினால் இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திடம் ராஜதந்திர ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
அதேநேரம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா கொழும்பில் குறித்த இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சிடம் கையளித்தார்.
அதில் மீனவர்களின் தடுத்து வைத்தல் காரணமாக அவர்களின் குடும்பங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தமது மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் உள்ளிடுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்று இலங்கை இந்தியாவிடம் கேட்டுள்ளது. இதனை தடுக்கும் போதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக்கிடைக்கும் என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தில் இலங்கை தமது உள்ளூர் சட்டங்களை மதித்து செயற்படவேண்டிய அவசியம் உள்ளதாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் கருணாதிலக்க அமனுகம தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கையின் சிறைகளில் மனிதாபிமான முறையிலேயே நடத்தப்படுவதாகவும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.





