இஸ்ரேல் பிரதமருக்கு அவசர சத்திர சிகிச்சை..!

382

vavuniyaஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹூ(63). பாலஸ்தீனத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

முதல் கட்டமாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவும், பாலஸ்தீன நாட்டுடன் மீண்டும் சமாதான பேச்சு தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாக வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி இருப்பதாக பெஞ்சமின் நேதன்யாஹூ கூறியதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பிரதமரின் வயிற்று வலிக்கு ´ஹெர்னியா´ எனப்படும் குடல் இறக்க நோய்தான் காரணம் என்பதை கண்டறிந்த வைத்தியர்கள், உடனடியாக அவசர சத்திர சிகிச்சை செய்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, இன்று ஜெருசலேமில் உள்ள வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஹெர்னியா நோய்க்கான சத்திர சிகிச்சை செய்யப்படவுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்த சத்திர சிகிச்சைக்கு பின்னர், ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வரும் புதன்கிழமை ஜெருசலேமில் நடைபெறும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.