சதம் அடிக்காமலே சாதனை படைத்த மிஸ்பா!!

550

misbah.cms

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மத்தியதர வீரராக களமிறங்கும் இவர் டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக பெற்ற 96 ஓட்டங்களாகும்.

மிஸ்பா இதுவரை விளையாடிய 125 ஒருநாள் போட்டியில் 29 அரைசதம் உட்பட 3819 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

இவரை அடுத்து பாகிஸ்தானின் வசிம் அக்ரம் (356 போட்டி, 3717 ரன், 6 அரைசதம்), மோயின் கான் (219 போட்டி, 3266 ஓட்டங்கள், 12 அரைசதம்), சிம்பாவேயின் சிகும்புரா (150 போட்டி, 2996 ஓட்டங்கள், 15 அரைசதம்) ஆகியோர் உள்ளனர். இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் இர்பான் பதான் (120 போட்டி, 5 அரைசதம், 1544 ஓட்டங்கள்) உள்ளார்.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் சென்ற பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்திய மிஸ்பா 4 அரைசதம் உட்பட 260 ஓட்டங்கள் எடுத்து, தொடர் நாயகன் விருது வென்றார்.

இதன்மூலம் இரண்டு அணிகள் மட்டும் மோதிய ஒருநாள் தொடரில் அதிக அரைசதம் அடித்த தலைவர் வரிசையில் முதலிடத்தை அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (எதிர்-இலங்கை, 4 அரைசதம், 2004), தென் ஆபிரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர்-பாகிஸ்தான், 4 அரைசதம், 2013) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணித் தலைவர்களில், அசார், கங்குலி, டோனி ஆகியோர் ஒரே தொடரில் அதிகபட்சமாக தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.