உசைன் போல்ட் மீண்டும் உலகச் சம்பியன்..!

361

usainஉசைன் போல்ட் ஆடவருக்கான நூறு மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் உலகப் பட்டத்தை வென்றுள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று மாலை, மழைக்கு மத்தியில் இறுதிப் போட்டியில் ஓடிய அவர் முதலிடம் பெற்று, உலகச் சம்பியன் என்கிற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார்.

நூறு மீட்டர் ஓட்டத்தை அவர் 9.77 நொடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.
இரண்டாவது இடம் அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டினுக்கு சென்றது. அவர் ஓடிய நேரம் 9.85 நொடிகள்.
வெண்கலப் பதக்கத்தை உசைன் போல்ட்டின் சக நாட்டவரான நெஸ்டா கார்ட்டர் வென்றார்.

இந்தப் போட்டியில் முதல் 50 மீட்டர்கள் வரை ஜஸ்டின் கால்டின் போல்ட்டைவிட சற்று முன்னணியின் இருந்தார். எனினும் அடுத்த 50 மீட்டர்களில் போல்ட் தனது வேகத்தைக் கூட்டி வெற்றி பெற்றார்.

நடைபெற்றுவரும் உலகத் தடகளப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இறுதியில் ஓடிய எட்டு பேரில் நாலவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தென் கொரியாவின் டேகு நகரில் இடம்பெற்ற உலகத் தடகளப் போட்டிகளின் இறுதி ஓட்டத்தின் போது, துபாக்கிச் சுடப்படுவதற்கு முன்னரே ஓடத் தொடங்கியதால் போல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அந்தப் போட்டியில் அவருடன் பயிற்சி பெறுபவரும் சக நாட்டவருமான யொஹான் பிளேக் வென்றார்.
மாஸ்கோவில் உசைன் போல்ட் 200 மற்றும் 100 மீட்டர் தொடரோட்டத்திலும் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.