கடும் மழையால் மட்டு, மலையகத்தில் மக்கள் அவதி!!

556

Rain

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடை மழை பெய்து வருகின்றது. இதன்படி இன்று காலை 8.30துடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 114.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, அம் மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடும் மழை காரணமாக பல வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் போக்குவரத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, நாவற்குடா உட்பட பல இடங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் இந்தப் பகுதிகளில் இன்றைய தினம் நடைபெறவிருந்த பல பொது நிகழ்வுகள் இரத்துச் செயயப்பட்டுள்ளன. தனியார் வகுப்புக்களும் நடைபெறவில்லை.

இதுஇவ்வாறு இருக்க மலையகத்தில் நேற்று (14.05) இரவு முதல் கன மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே காணப்படுகின்றது. அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன், பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ் வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்தோடு பெய்த மழை காரணமாக ஹட்டன் – தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை.

எனினும் இதில் பாதிக்கப்பட்ட நான்கு பேரை வேறு இடங்களுக்கு செல்லுமாறு கிராம சேவகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.